பக்கம் எண் :

213
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

நாகராஜ ராவ். கும்பகோணம். இவர் புல்லாங்குழல் நன்றாய் வாசிப்பார்.

நாகராஜ ராவ். தஞ்சாவூர். மிருதங்கம் சேதுராம் ராவின் மாமனார். இவர் வீணை, பிடில், மிருதங்கம் வாய்ப்பாட்டுகளில் கெட்டிக்காரர். இவருடைய மாணாக்கர் வெங்காசாமி ராவ்.

நாகாசாமி மாடிகராவ் சாயப். இவர் சரபோஜி மகாராஜாவின் மருமகன். வீணையும் மற்றும் வாத்தியங்களும் வாசிப்பார். எல்லா வித்துவான்களும் இவரிடம் போய்ப் பாடிக் காட்டுவது வழக்கம்.

நாகோஜி ராவ். இவர் காஞ்சிபுரம் கூடால சேஷ ஐயரவர்களின் மாணாக்கர். நன்றாய்ப் பாடுவார்.

நாகோஜி ராவ். B.A. F. M. U. Retired Inspector of Schools. சங்கீதத்தில் அதிக விருப்பமும் அபிமானமும் உள்ளவர். பள்ளிக்கூடச் சிறுவருக்கு உபயோகப்படும்படி இராக சுரக்கிரமத்தில் சிறு புஸ்தகம் எழுதியிருக்கிறார். துவாவிம்சதி சுருதிகளைப் பற்றி இவர் செய்த வியாசம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தஞ்சாவூர் சங்கீத வித்யா மகாஜன சபையின் 2-வது கான்பரன்சில் படிக்கப்பட்டது. துவரவிம்சதி சுருதி வீணை என்ற பெயருடைய வீணையைக் கள்ளிப்பலகையில் தயார் செய்து அநேகருக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கும்பகோணத்திலிருந்த காலத்தில் இராதா கிருஷ்ண பாகவதரைக் கொண்டு துவாவிம்சதி சுருதி ஆர்மோனியம் ஒன்று தயார் செய்திருக்கிறார்.

நாராயண ஐயங்கார். இவருக்கு சேட்டலூர் நாராயண ஐயங்கார் என்று பெயர் வழங்கும். "அபிநய சாரசம்புடம்" என்னும் புத்தகம் எழுதியிருக்கிறார்.

நாராயண ஐயர். உமையாள்புரம். கடவாத்தியம் வெகு நன்றாய் வாசிப்பார்.

நாராயணசாமி. சீர்காழி. பிடிலிலும் ஆர்மோனியத்திலும் கெட்டிக்காரர்.

நாராயணசாமி. நீடாமங்கலம். இவரும் இவர் பிள்ளையும் நன்றாய்ப் பாடுவார்கள்.

நாராயணசாமி. திருப்பதி. வீணை நன்றாய் வாசிப்பார்.

நாராயணசாமி அப்பா. தஞ்சாவூரிலிருந்த மகாராஷ்டிர ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். மிருதங்கம் அதி ரமணியமாக வாசிப்பார். வாய்ப்பாட்டோடாவது வாத்தியத்தோடாவது தனியாகவாவது இவர் மிருதங்கம் வாசிக்கும்போது ஒவ்வொரு ரவை ஜாதியும் நன்றாய்த் தெரியும்படி அவ்வளவு தெளிவாய் வாசிப்பார்.

நாராயணசாமி ஐயர். புதுக்கோட்டை சமஸ்தான வித்துவான். அப்புக்குட்டி ஐயரின் பௌத்திரர். இவரை பிடில் நாராயணசாமி ஐயரென்றும் சொல்லுவார்கள். புதுக்கோட்டைக்குச் சமீபம் திருக்கோகர்ணத்திலிருக்கிறார். சங்கீத சாகித்தியங்களிலும் பிடில் வாசிப்பதிலும் உலகப்பிரசித்தியான வித்துவான்.

நாராயணசாமி ஐயர். உமையாள்புரம். இவருக்கு பரதம் நாராயணசாமி ஐயர் என்று பெயர். இவர் சங்கீதத்திலும், பரதசாஸ்திரத்திலும் சிறந்த வித்துவான்.

நாராயணசாமி ஐயர். இவர் வீணைப் பெருமாளையரின் சகோதரர். மிகவும் நன்றாய் வீணை வாசிப்பார்.

நாராயணசாமி ஐயர். திருவிசநல்லூர். இராகம், பல்லவிகளைப் பாடுவார். வீணையும் பிடிலும் அதி சுகமாய் வாசிப்பார். பல்லவி சோமு ஐயரின் மாணாக்கர்.

நாராயணசாமி முதலியார். தாசில்தார் சாத்தூர். இவர் வீணை வாசிப்பதிலும் பாடுவதிலும் பெரிய வித்துவான்.