வீ வீரபத்திர ஐயர். பிரதாபசிங் மகாராஜா காலத்தில் (1740-1763) அநேக ரசிக ராகங்களிலும் தேசிக ராகங்களிலும் கற்பனையான அநேக கீர்த்தனைகளும் பதங்களும் தில்லனாக்களும் செய்திருக்கிறார். இவர் தென்னிந்திய சங்கீதத்தை ஒழுங்குக்குக் கொண்டு வர பிரயாசப்பட்டவர். வீரபத்திர பிள்ளை. திருநெல்வேலி. நன்றாய்ப் பாடுவார். வீணை வாசிப்பார். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வீரமா முனிவர். 1680. இவர் ஐரோப்பிய ரோமன் மத குரு. இந்தியாவுக்கு வந்து தமிழ் கற்று வித்துவானாகி தேம்பாவணி, வேதியரொழுக்கம், சதுர அகராதி, தொன்னூல், முதலிய நூல்களும், பஞ்சரத்தனம், நவமணிமாலை, நசல் காண்டம் முதலிய வைத்திய நூல்களும், பொருட் சுவை சொற் சுவை பக்திரசமுள்ள அநேக கீர்த்தனைகளும் செய்திருக்கிறார். இவர் திருநெல்வேலி ஜில்லா மணப்பாட்டில் சமாதியானார். வீராசாமி. இருப்பூர். பிடில் நன்றாய் வாசிப்பார். வீராசாமி. இவருக்கு அட்டேகண்டி வீராசாமி என்று பெயர். இவர் சில ராகமாலிகைகளையும் தில்லானாக்களையும் சுரஜதிகளையும் செய்திருக்கிறார். சிட்சை சொல்லி வைப்பதில் சமர்த்தர். வீராசாமி சாஸ்திரி. நாயுடுபேட்டை. நன்றாய்ப் பாடுவார். வீராசாமி நாயக்கர். தாசில்தார், தஞ்சாவூர். இவர் வீணை வாசிப்பிலும் வாய்ப் பாட்டிலும் சமர்த்தர்.அநேக கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். வீராசாமி நாயுடு. தஞ்சாவூர். இராமநாதபுர சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். சாரந்தா வெகு சுகமாய் வாசிப்பார். இவரை சாரந்தா நாயக்கர் என்பார்கள். வீரராகவாச்சாரியார். பந்தனபல்லி. வீணை நன்றாய் வாசிப்பார். வீரராகவையர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். சுகமாய்ப் பாடுவதினால் சல்லகாலி வீரராகவையர் என்று பெயர் பெற்றவர். வெ வெங்கட கிருஷ்ண நாயுடு. இவருக்கு மோதிரம் வெங்கட கிருஷ்ண நாயுடு என்று பெயர். இந்துஸ்தானி மிகவும் அழகாயும் தெளிவாயும் பாடுவார். வெங்கட சுப்பையர். T. B. A. B. L. சென்னப்பட்டணம். இவர் திருவத்தூர் தியாகராஜ ஐயர் மாணாக்கர். வீணை நன்றாய் வாசிப்பார். பக்தி ரசமாய் அரிகதை செய்வார். வெங்கட சுப்பையர். மானம்புச்சாவடி. திருவையாறு தியாகராஜ ஐயருக்கு பந்துவான இவர் அவரிடமே சங்கீதம் சொல்லிக் கொண்டு பிரபல வித்துவானாயிருந்தார். அநேக கீர்த்தனைகளை வெங்கிடுசாமி பேரில் செய்திருக்கிறார். பிடில் மிகவும் நன்றாய் வாசிப்பார். பஞ்சாபகேச ஐயர், சிவராம ஐயர் இவரின் மாணாக்கர். வெங்கட சுப்பையர். இவர் துளஜா ராஜா காலத்தில் தஞ்சாவூரில் சமஸ்தான வித்துவானாயிருந்தார். அநேக வர்ணங்களும் கீர்த்தனைகளும் செய்திருக்கிறார். இவர் 4,000 ராகம் பாடியிருப்பதாகச் சொல்லுகிறார்கள். இவருக்கு திருவையாற்றில் 5 வேலி நஞ்சை மானியம் ராஜா கொடுத்திருக்கிறார்.
|