பக்கம் எண் :

224
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

வடிவேல் நட்டுவனார். தஞ்சாவூர். இவர் பல சமஸ்தானங்களில் அநேக பரிசுகள் பெற்றிருக்கிறார். பிரசித்திபெற்ற வித்துவான்களால் கொண்டாடப் பெற்றவர். இராமநாதபுரம் சமஸ்தானத்தில் பாஸ்கர சேதுபதியவர்களால் தசரா காலத்தில் நாரதர் தாம்பூலமென்று ஒரு புது மரியாதை பெற்றவர். பரத சங்கீத சாகித்தியங்களில் சிறந்தவர். அநேகருக்கு சிட்சை சொல்லி வைத்திருக்கிறார்.

வரதப்பா. இவரை நர்த்தக்க வரதப்பா என்றழைப்பார்கள். பரதம் நன்றாய்க் கற்றுக் கொடுப்பார். இவர் குமாரரும் அப்படியே பரத சாஸ்திரத்தில் கெட்டிக்காரர்.

வரதாச்சாரியார். இவர் தென்மடம் நரசிம்மாச் சாரியாரின் சகோதரர். இவர்களிருவரும் வீணையிலும் பிடிலிலும் சிறந்த வித்துவான்கள்.

வரதாச்சாரியார். B.A.கே. அதி மனோகரமாய்ப் பாடுவார்.

வராகப்பையர். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் தஞ்சாவூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பக்ஷியாயும் சங்கீத வித்துவானாயுமிருந்தார். இங்கிலீஷ் வாத்தியங்களிலும் கர்நாடக வாத்தியங்களிலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர். கவர்னரிடம் பிடில் வாசித்து மெடல் வாங்கியிருக்கிறார். மகாராஜா இவருக்கு தஞ்சாவூர் டவுனில் வீடு கட்டிக் கொடுத்து பசுபதி கோயிலில் நஞ்சை நில மானியமும் கொடுத்திருக்கிறார். இவர் மாணாக்கர் லக்ஷ்மண் கோசாய், பரமேஸ்வர பாகவதர், வடிவேலு. இவர் பரம்பரையார் இன்னும் வீணையில் சிறந்த வித்துவான்களாயிருக்கிறார்கள்.

வராகம் ஐயர். இவர் வீணையில் சிறந்த வித்துவான். இவர் குமாரர் வீணை கோபாலசாமி ஐயர்.

வா

வாஞ்சிய சாஸ்திரியார். அதி ரமணியமாய்ப் பாடுவார்.

வி

விசாக மகாராஜா. திருவனந்தபுரம் சமஸ்தானாதிபதி. இவர் சங்கீத சாகித்தியங்களிலும் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் சிறந்த வித்துவான். அநேக சாகித்தியங்கள் செய்திருக்கிறார். 25-வருஷங்களுக்கு முன்னிருந்தவர்.

விசுவநாத ஐயர். இவர் மகா வைத்திநாதையரின் குமாரர். இவர் தகப்பனாரைப் போலவே நன்றாய்ப் பாடுவார்.

விசுவநாத கவிராயர். வங்கை தேசத்தில் 14-ம் நூற்றாண்டிலிருந்த ஒரு பெரிய சங்கீத வித்துவான். "சாகித்திய தர்ப்பணம்" என்ற நூல் செய்திருக்கிறார்.

விசுவநாத ராவ். இவர் பிடிலும் சுரபத்தும் நன்றாய் வாசிப்பார்.

விஜயகோபால். விஜயகோபால் முத்திரையுடன் சாகித்திய கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். 200-வருஷங்களுக்கு முன்னிருந்ததாகத் தெரிகிறது.

விஜய வராகப்பையர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் வீணை வித்துவானாக இருந்தவர். இவர் வீணை சிக்க ஓதப்ப ஐயரின் பௌத்திரர்.