யு யுவரங்க பூபதி. இவருக்கு கச்சி யுவரங்க பூபதி என்று பெயர். துளஜா ராஜா காலத்தில் உடையார் பாளையத்திலிருந்த ஜமீன்தார். சங்கீதத்தின் பெருமையையும் அருமையையும் நன்றாய் அறிந்தவர். சங்கீதத்தில் அதிக பிரியமுள்ளவர். தர்மசிந்தையும், தாராள மனசுமுடையவர். தமது சமஸ்தானத்தில் சங்கீத சபை ஒன்று ஏற்படுத்தி அதில் அநேக வித்துவான்களை வைத்து ஆதரித்து வந்தவர். ஒரு தடவை துளஜா மகாராஜா தம் மந்திரியோடு உருமாறி நாட்டுச் சோதனையாக போயிருந்தபோது உடையார் பாளைய சமஸ்தானத்தில் திரளான வித்துவான்கள் கூடியிருப்பதையும் சங்கீத கச்சேரி நடந்து கொண்டிருப்பதையும் வெகுநேரம் பார்த்து ஆச்சரியமும் வெட்கமுமடைந்தவராய் தன் அரண்மனைக்கு வந்து இவர் மூலமாகவே நல்ல வித்துவான்களைத் தன் சமஸ்தானத்திற்கு வரவழைத்து சங்கீதத்தையும் சங்கீத வித்துவான்களையும் பரிபாலித்து வந்தார் என்பார்கள். "யுவரங்கன்" என்ற முத்திரையுடன் அநேக பதங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. யோ T. யோசேப்பு ரயிட்டர். நெய்யூர். திருவனந்தபுரம். பொருட் செறிவான அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வ வடிவேல் நட்டுவனார். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர். வாய்ப்பாட்டிலும், வீணை, பிடில், முதலிய வாத்தியங்களிலும் ஒப்பில்லாதவர். இவர் ஒரு தடவை சென்னப்பட்டணத்தில் தஞ்சாவூர் சாமா நாயக்கர் வீட்டுக்குப் போனபோது அங்கே காதிலோடு அதாவது உயர்ந்த திண்டு மெத்தை போட்டு அதில் உட்கார்ந்து கச்சேரி பண்ணிக் கொண்டிருந்த திருவொற்றியூர் வீணைக் குப்பையர் என்பவர் இவரது பிடில் வாசிப்பைக் கேட்ட பின் ஆசனம் விட்டு இறங்கி தம் ஆசனத்தில் இவரை உட்காரும்படி செய்து இவருக்கு மிகவும் மரியாதை செய்தாரென்றும் அதற்குப் பின் இவரின் அபார யோக்கிதையை அறிந்து காதிலோடு என்னும் ஆசனத்தில் உட்காருகிறதில்லை என்றும் பரம்பரையாய்ச் சொல்லப்படுகிறது. இவர் தியாகராஜ ஐயர் காலத்தில் அவர் முன்னிலையில் கீர்த்தனம் பாடி அவரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். எவரும் தங்கள் சங்கீத சாகித்தியங்களை கீர்த்தனங்கள் செய்வதில் சிறந்த தியாகராஜ ஐயரவர்கள் முன்னிலையில் பாடிக் காட்டுவது வழக்கம். ஆனால் அவர் ஒருவர் பாட்டுக்காவது சிரக் கம்பம் செய்கிறதில்லை. அதைக் கேட்ட ஐயர் பூரிகல்யாணி ராகத்தில் "நாசாமிக நாமித தய சூட ராதா" என்ற தெலுங்கு பதத்தைக் கல்லுங் கரையும் படியாகப் பாடி ஐயரவர்களை சிரக்கம்பம் கரக்கம்பம் செய்யும்படி செய்து விட்டார் என்று பரம்பரையாய்ச் சொல்லிக் கொள்ளப்படுகிறது. மேலும் திருவனந்தபுரம் குலசேகர மகாராஜாவினால் வரவழைக்கப்பட்டு அரண்மனையிலேயே மாதம் ஒன்றுக்கு 105 ரூ சம்பளத்தில் அமர்ந்திருந்தார். குலசேகர மகாராஜாவுக்கு சங்கீத சாகித்தியங்களை நன்றாய்ப் போதிக்க அவர்களும் அநேக கீர்த்தனைகள் சுர ஜதிகள் வர்ணங்கள் செய்திருக்கிறார்கள். அவ்விடத்தில் 11-வருஷமிருந்து சங்கீதத்தில் இணையற்ற வித்துவான் என்று பேர் பெற்றுத் தந்தப் பிடிலும் தந்தப் பெட்டியும் ராஜாங்க முத்திரையுடன் 1834-ல் பரிசு பெற்றிருக்கிறார். மற்றும் அநேக சன்மானங்கள் பெற்றிருக்கிறதாகவுந் தெரிகிறது.
|