பக்கம் எண் :

222
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

முத்துசாமி நட்டுவர். இவர் குருமூர்த்தி நட்டுவரின் குமாரர். சென்னப்பட்டணத்திலிருந்தவர். வீணையிலும் பரதத்திலும் பிரசித்தி பெற்ற வித்துவான். வேங்கடகிரி ஆரணி சமஸ்தான வித்துவானாயிருந்து மேற்படி ராஜாக்களுக்கும் சங்கீதம் சொல்லி வைத்தவர். இவர் 108 தாளத்திலும் பல்லவி பாடும்படியான அபார வல்லமையுடையவர். இவரிடம் பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர், பட்டணம் சுப்பரமணிய ஐயர், மகா வைத்திநாதையர், கோயம்புத்தூர் ராகவையர், வீணை வேணு, சிதம்பரம் அப்பாக்கண்ணு, திருமுல்லை வாயில் பஞ்சனதம், புதுக்கோட்டை மாமுண்டியா பிள்ளை, தலை நாயர் இராதாகிருஷ்ண ஐயர், வீணை தனம், திருவல்லிக்கேணி தாசி கிருஷ்ணா முதலியவர்கள் சிட்சை சொல்லிக் கொண்டவர்கள். இவர்களில் தாசி கிருஷ்ணா வேங்கடகிரி சமஸ்தானத்தில் வீணை வாசிப்பதில் தேர்ந்தவளாயிருந்தாள். சிங்காரம் என்ற வீணை வேணு இவரின் குமாரர்.

முத்துசாமி முதலியார். தாசில்தார், திருத்துரைப்பூண்டி. இவர் உமையாள்புரம் கிருஷ்ண பாகவதரிடம் சொல்லிக் கொண்டு வீணை, பிடில் வாசிப்பதிலும் பாடுவதிலும் பேர் பெற்றவராயிருந்தார்.

முத்துசுவாமி நட்டுவர். இவருக்கு உசித பாவ அலங்கார முத்துசுவாமி நட்டுவர் என்று பெயர். இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் வித்துவானாயிருந்து சங்கீத பரிக்ஷையில் சரப்பளி விருது பெற்றிருக்கிறார்.

முத்துசுவாமி முதலியார். பாளையங்கோட்டை. வெங்கு முதலியாரின் பரம்பரை. இவர் பாட்டிலும் வீணை வாசிப்பிலும் கெட்டிக்காரர். அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

முத்துத்தாண்டவர். இவர் அருணாஜலக் கவிராயருக்கு முன்னிருந்தவர். தமிழிலும் சங்கீதத்திலும் வித்துவான். சிதம்பரம் நடராஜர் பேரில் பக்தி ரசமாயும் சிருங்கார ரசமாயும் அநேக பதம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

முத்து, முனுசாமி. இவர்கள் மிருதங்கத்தில் முத்தமிட்டுக் கொள்ளுவது போல அவ்வளவு நாஜுக்காய் வாசிப்பார்கள்.

முத்தையர். போடிநாயக்கனூர். மிருதங்கம் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

முத்தையர். இவருக்கு கேகர முத்தையர் என்று பெயர். இவர் ராகம் பல்லவிகளையும் கீர்த்தனைகளையும் கர்நாடக சுத்தமாய்ப் பாடுவார்.

முத்தையா பாகவதர். ஸ்ரீ வில்லிபுத்தூர். இராகம் பல்லவிகளை மிகவும் நன்றாய்ப் பாடுவார்.

முத்தையா பாகவதர். அரிகேச நல்லூர், திருநெல்வேலி ஜில்லா. இவர் சென்னப்பட்டணம் சபேசையரின் மாணாக்கர். சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்த இலட்சண வித்துவான். கோட் வாத்தியம் இனிமையாக வாசிப்பார். அரிகதை செய்வதில் உலகப் பிரசித்தர். அநேக இடங்களில் போய் சன்மானம் பெற்றிருக்கிறார்.

முனுசாமி. ஆர்மோனியம் பிடில் இவைகளை நன்றாய் வாசிப்பார்.

மே

மேரு சுவாமி. தஞ்சாவூர் மடாதிபதி பரம்பரையைச் சேர்ந்த இவர் மலையாள சமஸ்தானத்திலிருந்தார். மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார்.