| மீ மீனாக்ஷிசுந்தரம் அண்ணாவி. இவர் மதுரை மீனாக்ஷிசுந்தர ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையில் தோன்றியவர். பரத சங்கீத சாகித்தியங்களில் சிறந்தவர். ஆரிய திராவிட ஆந்திர பரத சாஸ்திரங்களைச் சேகரித்து வைத்திருந்தார். மு முத்து இராமலிங்க சேதுபதி ராஜா. இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் கெட்டிக்காரர். இவர் செய்த சாகித்தியங்கள் அநேகம் அச்சிடப்பட்டு வழக்கத்திலிருக்கிறது. 45 வருஷங்களுக்கு முன்னிருந்தவர். முத்து இராமலிங்க சேதுபதி ராஜா. இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி. இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை, பிடில் முதலான வாத்தியங்களிலும் நல்ல பழக்கமுள்ளவர். முத்து கிருஷ்ண நாயுடு. இவரும் இவர் குமாரரும் மிருதங்கம் வெகு சுகமாய் வாசிப்பார்கள். முத்து கிருஷ்ண முதலியார். சென்னப்பட்டணம். இவரை மணலி முத்து கிருஷ்ண முதலியார் என்றழைப்பார்கள். இவரும் இவர் குமாரர் மணலி சின்னையா முதலியாரென்ற வேங்கட கிருஷ்ண முதலியாரும் தமிழிலும் சங்கீதத்திலும் அதிக அபிமானமும் பிரியமுமுள்ளவர்கள். இவர்கள் அநேக தமிழ் வித்துவான்களையும் சங்கீத வித்துவான்களையும் வைத்து ஆதரித்து வந்தார்கள். சுண்டி வேங்கட சுப்பையர், இராமசாமி தீக்ஷதர், கோவிந்த தீக்ஷதர், குருமூர்த்தி சாஸ்திரி, முத்துத்தாண்டவ கவிராயர், அருணாசலக் கவிராயர், முத்துசுவாமி தீக்ஷதர், பாலசுவாமி தீக்ஷதர், சின்னசாமி தீக்ஷதர் ஆகிய இவர்கள் இவர் சபையிலிருந்த வித்துவான்களில் சிறந்தவர்கள். முத்துசாமி. இவர் மாரியப்பனின் குமாரர். பரதத்திலும் தாளத்திலும் பாட்டிலும் மிகவும் சமர்த்தர். அநேக சமஸ்தானங்களில் சன்மானம் பெற்றிருக்கிறார். முத்துசாமி தீக்ஷதர். 1775. இவர் இராமசாமி தீக்ஷதரின் குமாரர். எட்டையாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவான். மாயாமாளவ கௌள ராகத்தில் கீர்த்தனைகளும் ராமர் அஷ்டபதிகளுக்கு வர்ணகிரமத்தோடு ராகதாளங்களும், சூளாதி சப்த தாளங்களில் நவக்கிரக கீர்த்தனைகளும், கமலாம்பாள் விஷயமாய் 9 கீர்த்தனங்களும், வேங்கடேசுவர எட்டப்ப பூபதியின் மேல், மேகரஞ்சித ராகத்திலும் அமிருத வருஷணி ராகத்திலும் கீர்த்தனங்கள் செய்திருக்கிறார். "குருகோக" முத்திரையுடன் தியாகராஜ சுவாமி பேரிலும் இன்னும் அநேக சுவாமிகள் பேரிலும் வேங்கடமகி சம்பிரதாய ராகங்களை விடாமல் கமக ஜாதியங்கள், அந்தந்த ராக ஜீவசுரங்கள், ராக நாமங்கள் நன்றாய் விளங்கும்படி கீர்த்தனைகள் செய்திருக்கிறார். திருக்கடவூர் பாரதி, ஆவிடையார் கோவில் வீணை வேங்கடரமணையா, தேனார் சுப்பிரமணிய ஐயா, திருவாரூர் சுத்த மிருதங்கம் தம்பி அப்பன், தஞ்சாவூர் பொன்னையா, வடிவேல், வேட்டனூர் சுப்பராயலு, கொரநாடு இராமசாமி, திருவழுந்தூர் வில்வவனம், திருவாரூர் ஐயாஸாமி, திருவாரூர் கமலம், வள்ளலார் கோவில் அம்மணி முதலியவர்கள் இவர் மாணாக்கர்கள். முத்துசாமித் தேவர். இராமநாதபுரம். பிடில் நன்றாய் வாசிப்பார்.
|