மகாதேவ ஐயர். திருவனந்தபுரம் சமஸ்தான வித்துவான் பரமேஸ்வர ஐயரின் குமாரர். மூன்று ஸ்தாயியும் காம்பீரமாய்ப் பாடுவார். ஒவ்வொரு அட்சரமும் தெளிவாய்த் தெரியும்படி அவ்வளவு நன்றாய்ப் பிடில் வாசிப்பார். இவர் குமாரர் வீணை சாமி ஐயர். அனந்தராம ஐயர் இவர் மாணாக்கர். மகாதேவ நட்டுவனார். தஞ்சாவூர். பரத சங்கீத சாகித்தியங்களில் மிகத் தேர்ந்தவர். அநேக ராஜாக்களாலும் பிரபுக்களாலும் தோடா, கண்டி முதலிய சன்மானங்கள் பெற்றவர். மகாதேவன். மகா புத்திசாலி. நாகசுரத்தில் மனதுருக வாசிப்பார். இவர் பரம்பரை நல்லப்பா கணக்குத் தவறாமல் நாகசுரம் நன்றாய் வாசிப்பார். மதனபாலதேவ. 1528. "ஆனந்த சஞ்சீவன" என்ற சங்கீத நூல் எழுதியிருக்கிறார். மதிராஜம் பாகவதர். மத்திம காலத்தில் சுகமாய்ப் பாடுவார். திருநெல்வேலி எட்டையாபுரத்திலிருந்தார். மரியான் உபதேசியார். ஏழாயிரம் பண்ணை, திருநெல்வேலி. அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். மா மாசிலாமணி முதலியார். சென்னப்பட்டணத்தில் பிரசித்த போட்டோகிராபராயிருந்து சங்கீதம் கற்று, பிடில் மிகவும் அற்புதமாய் வாசிப்பார். இவருடைய மாணாக்கர் ஜோனாஸ் சுந்தரராஜம். மாணிக்கம். பிடில் நன்றாய் வாசிப்பார். மாதவ மகாராஜா. குவாலியர். இவர் சங்கீதத்திலும் வீணை பிடில் முதலிய வாத்தியங்களிலும் கெட்டிக்காராயிருக்கிறார். மாதவ ராவ். கமாஸ்தார். சம்பிரதாயமாய்ப் பாடுவார். இவர் குமாரர் ரகுபதிராவ் பாட்டிலும் சுரபத்திலும் மிருதங்கத்திலும் நல்ல யோக்கியதை யுடையவர். மாதவ ராவ். இவரை தார்வாட மாதவ ராவ் என்று அழைப்பார்கள். பல்லாரியி லிருந்தார். கர்நாடகமும் இந்துஸ்தானியும் நன்றாய்ப் பாடுவார். சாரீரம் கின்னர தந்தி போல் சுகமாயிருக்கும். மாதுருபூதையா. புதுக்கோட்டை. சேஷாசல பாகவதரின் குமாரர். சங்கீத வித்தையில் மிகத் தேர்ந்தவர். மாதுருபூதையா. திருசிராப்பள்ளி. இவருக்கு கவி மாதுரு பூதையா என்று பெயர். இவர் ஸ்ரீ சுகந்தி குந்தளாம்பாள் பேரில் நீதிரசமாகவும் பக்திரசமாகவும் அநேக கீர்த்தனைகள் செய்திருக்கிறார். சிருங்கார ரசத்திலும் அநேக பதங்கள் செய்திருக்கிறார். "பாரிஜாதகரணம்" என்னும் நூலை கீர்த்தனமாய்ச் செய்திருக்கிறார். இவர் கீர்த்தனங்கள் "திரி சிர கிரி" என்ற முத்திரையால் முடியும். மாமுண்டியா பிள்ளை. புதுக்கோட்டை, கிஞ்சிரா வெகு அற்புதமாய் வாசிப்பார். தாள ஞானமுடையவர். இவருடைய மாணாக்கர் தக்ஷணாமூர்த்தி.
|