பக்கம் எண் :

219
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

பொன்னுசாமி அண்ணாவி. மதுரை. மதுரை சுந்தரேசர் ஆலயத்தின் நட்டுவாங்க பரம்பரையில் வந்தவர். ஆட்டிவைப்பதிலும் வாத்தியங்களிலும் பெயர் பெற்றவர்.

பொன்னையா. திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் நிருத்தம் சொல்லிக் கொடுப்பதில் கெட்டிக்காரராயிருந்தார். வடிவேலுடன் சேர்ந்து நிருத்தத்திற்கு வேண்டிய தான சாகித்தியங்கள் செய்திருக்கிறார்.

பொன்னையா நட்டுவனார். தமிழிலும் தெலுங்கிலும் பூரண பாண்டித்திய முடையவராய் அநேக கீர்த்தனங்களும் வர்ணங்களும் செய்திருக்கிறார். இவர் தஞ்சை சிவாஜி மகாராஜா சபையிலும் மைசூர் கிருஷ்ணாஜி பூபால ராஜா சபையிலும் பெரிதும் கொண்டாடப்பட்டவராயிருந்தார். மைசூர் மலையாளம் தஞ்சாவூர் முதலிய இடங்களை ஆண்ட மகா ராஜாக்கள் பேரில் அநேக கீர்த்தனைகளும் சாகித்தியங்களும் செய்திருக்கிறார். பரத நாட்டியத்திற்கு வேண்டிய வர்ணங்கள் சாகித்தியங்கள் பதங்கள் ஆகிய இவைகளையும் பரத முறைகளையும் செய்து ஹிம ஸேது பரியந்தம் வழங்கும்படி செய்தவரென சங்கீத வித்துவான்களால் நாளது வரையும் கொண்டாடப்படுகிறவர். பரத சங்கீத சாகித்தியத்தில் தேர்ந்தவர்.

பொன்னையா பிள்ளை. தஞ்சாவூர். பரத சங்கீத வித்துவான். ராகம் பல்லவி பாடுவதிலும் பரத நாட்டியம் செய்து வைப்பதிலும் மிகச் சமர்த்தர். அநேகருக்கு சிட்சை சொல்லி வைத்திருக்கிறார்.

மகம்மத் ஷார்க்வி. ஜான்பூர். இவர் கியால் பத்ததியை உண்டாக்கினவர்.

மகம்மேரு. தஞ்சாவூர் வாசியான இவர் திருவனந்தபுர சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். மூன்றரை ஸ்தாயி வரைக்கும் பாடுவார். மடாதிபதி பரம்பரையைச் சேர்ந்தவர்.

மகாதேவ அண்ணாவி. திருநெல்வேலி செந்தில் வேலண்ணாவியின் குமாரர். துளஜா மகா ராஜாவால் வரவழைக்கப்பட்டு தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். இவர் தமிழிலும் தெலுங்கிலும் அநேக வர்ணங்கள் கீர்த்தனைகள் சுர ஜதிகள் செய்திருக்கிறார். அவை நாளது வரை வழக்கத்திலிருந்து வருகின்றன. இவர் துளஜா மகாராஜா கொலுமண்டபத்தில் தோடி ராகத்தில் "போசலே துளஜேந்திர ராஜா" என்னும் வர்ணத்தைப் பாடி தன்னோடு திருநெல்வேலியிலிருந்து கூட வந்த வனசாட்சி, முத்துமன்னார் என்ற நாட்டியப் பெண்களை ஆட்டி வைத்தார். அந்தக் காலத்தில் சமஸ்தான வித்துவான்களாயிருந்த ஆதிப்பையர், வீணை சுப்புக்குட்டி ஐயர், திருமலை ஐயர், வெங்குசுப்பையர், முதலியவர்கள் இவரிடம் தங்கள் வீணை வாசிப்பை பாவ ராக தாளத்துடன் விருத்தி செய்து கொண்டார்கள். காஞ்சீபுரம் சாமா சாஸ்திரிகளும் திருவாரூர் முத்துசாமி தீட்சதரும் இவரிடம் வீணையும் பரத சாஸ்திரமும் அப்பியாசம் செய்து கொண்டவர்கள். சங்கீதத்தில் இவருக்கிருந்த அபார யோக்கிதைக்கு மகாராஜா சந்தோஷப்பட்டு தஞ்சாவூர் மேல ராஜவீதியில் வீடு கட்டிக் கொடுத்த 10-வேலி நஞ்சை நிலம் சர்வ மானிய மிட்டு சமஸ்தான வித்துவானாக வைத்துக் கொண்டார். சிவானந்தம், வடிவேல், குருமூர்த்தி இவருடைய பிள்ளைகள். இவர்கள் மூன்று பெயரும் சங்கீத சாகித்தியத்திலும் பரத நாட்டியத்திலும், வீணை வாசிப்பிலும் சிறந்த வித்துவான்களாயிருந்தார்கள்.