பக்கம் எண் :

218
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

பெரியதம்பி அண்ணாவி. இவருக்கு சூரியமூர்த்தி அண்ணாவி என்று பெயர். மதுரை மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் நட்டுவாங்க பரம்பரையில் வந்தவர். பரதத்தில் மிகக் கெட்டிக்காரர்.

பெரிய தேவையா. கரூர். நன்றாய்ப் பாடுவார். கர்நாடக சுத்தியாய் பிடில் வாசிப்பார்.

பெரிய பக்கிரி. இவரை மன்னார்குடி பக்கிரி என்று சொல்லுவார்கள். நாகசுரம் அதிக அற்புதமாய் வாசிப்பார்.

பெரிய வைத்தி. இவர் சிவகங்கை சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். இவரும் இவர் சகோதரர் சின்னவைத்தியம் சங்கீத சாகித்தியங்களிலும் பாட்டிலும் உலக பிரசித்தியாயிருந்தார்கள்.

பெருமாளையர். இவரை மகிபாலை வீணைப் பெருமாளையர் என்றழைப்பார்கள். இவர் சரபோஜி மகாராஜா காலத்தில் 1798-1824 தஞ்சாவூர் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தவர். வீணை காளாஸ்திரி ஐயரின் மாணாக்கர். இவர் வம்சத்தார்கள் பரம்பரையாக வீணை வித்துவான்களாயிருக்கிறார்கள். கனராக தாளங்களை வாசிப்பதில் பிரசித்தர். பைரவி முதலான ரக்தி ராகங்களை வந்தது திரும்ப வராமல் 10 நாள் வரை வாசிப்பார். வடதேச சமஸ்தானங்களில் சத்திர சாமர பல்லக்கு ரத்தினகசித வீணை முதலானவைகளை சன்மானமாகப் பெற்றிருக்கிறார். புதுக்கோட்டை ராஜா ரகுநாத தொண்டமான் சபையில் ஒரே இராகத்தை 20 நாள் கிரமமாய் வாசித்து சன்மானிக்கப் பெற்றவர். வீணையில் தாளங்கள் தவறாமல் வாசிக்கிறதில் மிகப் பிரசித்தியுடையவர். தஞ்சாவூர் மகாராஜா மகிபாலை என்ற கிராமத்தை இவருக்கு சர்மானியம் செய்திருக்கிறார். இவர் தம்பி வீணை நாராணயசாமி ஐயர் நன்றாய் வீணை வாசிப்பார்.

பெருமாளையர். மதுரை. இவரும் இவர் தகப்பனாரும் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார்கள்.

பை

பையா. தஞ்சாவூர். இந்துஸ்தானி நன்றாய்ப் பாடுவார். சுரபத் நன்றாய் வாசிப்பார்.

பொ

பொன்னம்பலம். இவர் நாகலிங்கம் அப்பாவின் குமாரர். பிடிலும் ஆர்மோனியமும் நன்றாய் வாசிப்பார்.

பொன்னுசாமி. இருப்பூர். பிடில் நன்றாய் வாசிப்பார்.

பொன்னுசாமி. திருவத்தூர். குப்பையரோடிருந்து அவரைப் போலவே சங்கீதத்தில் நல்ல யோக்கியதை உடையவராய் விளங்கினார். பிடில் நன்றாய் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். சென்னப்பட்டணத்திலிருந்தவர்.

பொன்னுசாமி. தஞ்சாவூர் சுப்பராய சாஸ்திரிகளின் மாணாக்கர். தன்குரு செய்த கீர்த்தனைகளையும் சாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளையும் தமிழ்ப் பதங்களையும் நன்றாய்ப் பாடுவார்.

பொன்னுசாமி. மதுரை. நாகசுரம் மிகவும் நன்றாய் வாசிப்பார்.