பாவவினாச முதலியார். இவர் தமிழிலும் சங்கீதத்திலும் பண்டிதர். பாவவினாச முத்திரையுடன் நிந்தாஸ்துதியாய் அநேக பதங்கள் செய்திருக்கிறார். துளஜா மகாராஜா காலத்திலிருந்தவர். பாவா. இவர் குவாலியரிலிருந்து வந்தவர். இந்துஸ்தானியில் விசேஷ சுவாரசத்தோடு அரிகதை செய்வார். பாஸ்கர சேதுபதி. இராமநாதபுர சமஸ்தானாதிபதி. தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் சிறந்தவர். இனிமையான குரலுடன் அழகாய்ப் பாடுவார். பி பிங்கள். B.A. இவர் 1898-ல் "இந்திய சங்கீதம்" என்ற பேருடன் இந்துஸ்தானி சங்கீதத்தைப் பற்றி இங்கிலீஷிலும் மகாராஷ்டிரத்திலும் புஸ்தகம் எழுதியிருக்கிறார். பிச்சமுத்து. B.A. L.T. இவர் சங்கீதத்தில் அதிக அபிமானமும் பிரியமுமுள்ளவர். ஆங்கிலேய சங்கீதத்தில் உயர்தர பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர். ஆர்மோனியம் பியானா அதிசுகமாய் வாசிப்பார். இவரிடம் சொல்லிக் கொண்ட அநேகர் பல இடங்களிலும் Organists களா யிருக்கிறார்கள்.
பிரதாபசிங் மகாராஜா. மத்யார்ச்சுனம். இவர் தஞ்சாவூரை ஆண்டு கொண்டிருந்த அமீர்சிங் மகாராஜாவின் குமாரர். சங்கீதம் நன்றாய்த் தெரிந்தவர். மிருதங்கத்தில் கெட்டிக்காரர். மகாராஷ்டிர பாஷையில் வர்ணக்கிரமங்கள் விளங்கும்படி ‘நவரத்தின மாலிகை’ என்னும் இராகதாள மாலிகை ஒன்றை சுரப்படுத்தியிருக்கிறார். சிவாஜி மகாராஜா காலத்துக்குச் சில காலத்துக்கு முன் காலஞ்சென்றார். பிரதாப ராமசுவாமி பாகவதர். நீடாமங்கலத்துக்குச் சமீபத்திலுள்ள பூவனூர். இவர் சங்கீதத்திலும் சமஸ்கிருத சாகித்தியங்கள் செய்வதிலும் பாண்டித்தியமுடையர். பு புண்டரீக விட்டலா. இவர் 16-வது நூற்றாண்டின் கடைசியிலிருந்தவர். "நிர்த்தன நிர்ணயா", "இராக மஞ்சரி", "சீக்கிர போதனி", "நாமமாலா", "ஷட்ராக சந்திரோதய", "இராகமாலா", " சங்கீத விருத்த இரத்தினாகரா" என்ற புஸ்தகங்கள் செய்திருக்கிறார். புரந்தர விட்டலதாஸ். இவர் பூனாவில் கோடீஸ்வரராக இருந்து ஸ்ரீ பாண்டுரங்கப் பெருமாளின் பக்தி மேலிட்டால் புதிது புதிதாகக் கீர்த்தனைகள் செய்து பஜனை செய்து கொண்டேயிருப்பார். இவர் அலங்காரங்கள், பிள்ளையார் கீதங்கள், கீர்த்தனைகள், சூளாதிகள், பிரபந்தங்கள், தாயங்கள், பகவான் நாமக்கிருதிகள் முதலியவைகளைச் செய்திருக்கிறார். வேதாந்த விஷயமாயுள்ள இவைகள் உத்தரதேச மடங்களில் நாளது வரையிலும் வழக்கத்திலிருக்கின்றன. புருஷோத்தம மிஸ்ரா. 1730. இவர் "சங்கீத நாராயணா" என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். பெ பெரிய குப்புசாமி. ஐதராபாத். இவர் அதிக ரமணீயமாயும் சம்பிரதாயமாயும் பிடில் வாசிப்பார். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார்.
|