பக்கம் எண் :

216
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

பலவந்த ராவ். பையா சாஹேப். குவாலியர் மாதவ மகாராஜா அவர்களின் தம்பி. இவர் சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பிலும் அதி சமர்த்தர். ஸ்ரீ கிருஷ்ணன் பேரில் அநேக கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார்.

பவப்பட்டா. 1640. இவர் " சங்கீதானுபாங்குச" என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார்.

பவப்பட்டா. 1680. "அனூப சங்கீத விலாசா", ‘மரளிப்பிரகாச’ "நஷ்டோ திஷ்ட பிரபோதக திரவ்பத டீக" என்ற புஸ்தகங்களை எழுதியிருக்கிறார்.

பனேகான். நேப்பாள வாசியான இவர் இந்துஸ்தானியைப் பாடாந்தரங்களாகப் பாடுவதிலும் டப்பா விஸ்தரித்துப் பாடுவதிலும் சமர்த்தர். கர்நாடகத்தில் பல்லவிகளை எப்படி விஸ்தாரமாய் வின்னியாசப்படுத்தி வாசிக்கலாமோ அப்படி இந்துஸ்தானியிலும் விரிவாய்ப் பாடுவார்.

பா

பாக்கியநாதன். P. சிவகாசி. அநேகம் கீர்த்தனைகள் செய்திருக்கிறார்.

பாண்டித் துரைசாமித் தேவர். ஜமீன்தார் பாலவனத்தம். இவர் தமிழிலும் சங்கீத சாகித்தியத்திலும் பாட்டிலும் வாத்திய வாசிப்புகளிலும் ஜெகப்பிரசித்தர்.

பாப்பையா. பெங்களூர். கின்னர தந்தியின் நாதம்போலச் சுகமாய்ப் பாடுவார்.

பாரதி. மாயவரம். திருக்கடவூர் பாரதி, சின்ன பாரதி இருவரும் சகோதரர்கள். தமிழிலும் சங்கீதத்திலும் விசேஷ பாண்டித்தியமுடையவர்கள்.

பார்த்தசாரதி நாயுடு. சென்னப்பட்டணம். வீணை வேணுவின் மாணாக்கர். சங்கீதத்திலும் வீணை வாசிப்பதிலும் சிறந்த வித்துவான்.

பாலகிருஷ்ண செட்டியார். இவர் அதிக சுகமாய்ப் பாடிக் கொண்டே வீணை வாசிப்பார். பிடில் தவிர மற்ற வாத்தியங்களை எல்லாம் சுகமாய் வாசிப்பார்.

பால கிருஷ்ணையர். இவர் கிருஷ்ண பாகவதரின் மாணாக்கர். இவரும் இவர் தகப்பனார் சாமையரும் நன்றாய்ப் பிடில் வாசிப்பார்கள்.

பாலசுவாமி தீக்ஷதர். 1786-1859. இராமசுவாமி தீக்ஷதரின் குமாரர். சங்கீத இலட்சிய இலட்சணங்களை நன்றாய் அறிந்தவர். சென்னையில் மணலி சின்னையா முதலியாரால் ஒரு ஆங்கிலேய துரையிடத்திலும் பிடில் வாசிக்கக் கற்றுக்கொண்டவர். வீணை சுரபத் சித்தாராவும் வாசிப்பார். எட்டையாபுரம் சமஸ்தானத்தில் சங்கீத வித்துவானாயிருந்தார். சாரங்க, தற்பார், கன்னட, ருத்திரப்பிரியா இராகங்களில் கீர்த்தனைகள் செய்திருக்கிறார். வேங்கடேஸ்வர எட்டப்ப ராஜா பேரில் ருத்திரப்பிரியா, தர்பார், வசந்தா இந்த இராகங்களில் முத்தாயி சுரங்களோடு தருக்கள் செய்து பாடி இராஜாவால் சன்மானிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய பௌத்திரரும் சுவீகார புத்திரருமானவர் சுப்பராய தீக்ஷதர்.

பாலபுவனாதபட். இவர் குவாலியர் பாவாவின் பௌத்திரர். இந்துஸ்தானியில் நன்றாய் அரிகதை செய்வார்.

பாலு ஐயர். சென்னப்பட்டணம். பிடில் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

பாலு முதலியார். Dr. திருசிராப்பள்ளி. பிச்சாண்டார் கோவில் சுப்பராயரிடம் சொல்லிக் கொண்டு பாட்டிலும் வீணை வாசிப்பதிலும் கெட்டிக்காரராயிருந்தார்.