பஞ்சாபகேச பாகவதர். இவர் கிருஷ்ண பாகவதருக்கு பரதம் சொல்லி வைத்த திருப்பூந்துருத்தி அப்பாத்துரை ஐயரின் குமாரர். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதரின் மாணாக்கர். சங்கீத இலட்சிய லட்சணங்களிலும் பல்லவி பாடுவதிலும் சிறந்த வித்துவான். அதி நுட்பமான கமக சுரங்களும் தெளிவாய்த் தெரியும்படி பிடில் மிக இனிமையாய் வாசிப்பார். அரிகதை செய்து ஜனங்களை ரஞ்சிக்கச் செய்வதில் உலகப் பிரசித்தமானவர். சிட்சை சொல்லி வைப்பதில் சிரத்தையும் சொல்வன்மையுமுடையவர். இவர் மாணாக்கர் சேஷ பாகவதர். பஞ்சாபகேசன். தஞ்சாவூர். தாளத்திலும் ஆட்டிவைப்பதிலும் கெட்டிக்காரர். பஞ்சு ஐயர். வாய்ப்பாட்டிலும் சுரபத்திலும் சிறந்த வித்துவான். பஞ்சுசாமி சாகிப். சுரபத்தும் மிருதங்கமும் மிகவும் அற்புதமாய் வாசிப்பார். பஞ்சுசாமி ராவ். இராஜாவின் பந்து. இவர் வீணை பிடில் சுரபத் மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பட்கோசாமி. இவர்க்கு ஜகநாத பட்கோசாமி என்று பெயர். தஞ்சாவூர். இவர் பால சரஸ்வதி வாசிப்பதில் தேர்ந்தவர். King Edward VII. Prince of Wales பிரபுவாக இந்தியாவுக்கு வந்த காலத்தில் இவர் தம் பால சரஸ்வதி என்ற வீணையில் அதிக அற்புதமாக கானம் செய்து சன்மானம் பெற்றிருக்கிறார். இவர் குமாரர் மணி பட்கோசுவாமி வீணை, மிருதங்கம், ஆர்மோனியம் முதலியவைகளை நன்றாய் வாசிப்பார். பட்டாபிராம ஐயர். மைசூர் சமஸ்தானத்திலிருந்தார். சங்கீத சாகித்தியங்கள் விசேஷமாய்ச் செய்திருக்கிறார். அநேக ஜாவளிகளை நாடக அங்கமாய் எழுதியிருக்கிறார். பத்மநாப நாயுடு. தஞ்சாவூர். பிடில் வாசிப்பதிலும் சிட்சை சொல்லிக் கொடுப்பதிலும் கெட்டிக்காரர். பத்மநாபாச் சாரியார். விஜயநகர சமஸ்தானம். சங்கீத சாகித்தியங்களிலும் வீணை வாசிப்பதிலும் பேர் போனவர். பரமேஸ்வர ஐயர். ஐயலூர். தஞ்சாவூர் மிருதங்க நாராயணசாமி அப்பாவின் மாணாக்கர். மிருதங்கம் நன்றாய் வாசிப்பார். பரமேஸ்வர பாகவதர். திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் வித்துவான். வீணை சுரபத் வாசிப்பதிலும், அரிகதை செய்வதிலும் சிறந்த வித்துவான். இவர் சாரீரம் கின்னா தந்தி போல் இனிய சுரமாயும் மிக அழகாயுமிருக்கும். அநேக வர்ணங்கள் செய்திருக்கிறார். கிட்டு பாகவதர், அப்பு பாகவதர். கோபால பாகவதர், சீத்தாராம பாகவதர், முக்கே கணபதி ஐயர், கோயமுத்தூர் இராகவ ஐயர், முதலியோர் இவருடைய மாணாக்கர்கள். மகாதேவ ஐயர், ராமகிருஷ்ண ஐயர் இவர் பிள்ளைகள். பரிமள இரங்கன். சுமார் 200 வருஷங்களுக்கு முன் வடதேசத்திலிருந்தவர். இவர் பரிமள இரங்கர் என்கிற முத்திரையுடன் தெலுங்கில் எதிபிராசங்களுடன் அநேக பதங்கள் செய்திருக்கிறார். பலவந்த ராவ். இவருக்கு தார்வாட பலவந்த ராவ் என்று பெயர். பல்லாரி ஜில்லாவிலிருந்தார். இந்துஸ்தானி கர்நாடக சங்கீதங்களில் நல்ல ஞானஸ்தர். இந்துஸ்தானி கமக மார்க்கமாய் மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாய்ப் பாடுவார். இவரைப் போலவே இவர் பிள்ளைகளிருவரும் இந்துஸ்தானி பாடிக் கேட்போர் மனதை ஆனந்தப்படுத்துவார்கள்.
|