அதற்கு ஏழாமிடமாகிய கடகத்தில் துத்தத்துள் விளரி பிறக்குமென்றும், அதற்கு ஏழாமிடமாகிய கும்பத்தில் விளரியுள் கைக்கிளை பிறக்குமென்றும் சொல்லுகிறார். பன்னிரண்டாமிடமாகிய மீன ராசியில் தாரத்துள் உழை தோன்ற உழையுள் குரல் தோன்றும்; இது குரலில் முதற் பிறப்பென்று இதன் பின் அறிகிறோம். இவைகளில் இன்னின்ன சுரங்கள் இன்னின்ன அலகோடு பொருந்துகின்றனவென்று சொல்லுகிறார். இவைகள் யாவையும் வட்டப்பாலைச் சக்கரத்தில் தெளிவாகக் காணலாம். இதை நாம் கவனிக்கையில், சுரங்கள் நின்ற ராசி நீக்கி ஏழாமிடம் ஏழாமிடமாகச் சுரஙகள் வருவதைக் காண்கிறோம். இவைகள் ஒவ்வொன்றும், அவைகளுக்கு, ச-ப முறைப்படி பொருந்திய சுரங்களாயிருக்கின்றனவென்று இதன் முன் பார்த்தோம். துவக்கிய சுரத்திற்கு ஏழாம் ராசியிலுள்ள சுரம் களத்திரம் போல் ஒத்து நிற்கும். துவக்கிய சுரம் ஒன்றானால் பொருத்தமுள்ள அல்லது களத்திர சுரம் 1(1/2)ஆக வரும். துவக்கிய சுரத்தில் ஒரு ஸ்தாயி மறுபடியும் முடியுமானால் அது இரு மடங்காகும். ஆனால் பொருத்தமுள்ள சுரமோ துவக்கிய சுரத்திற்கும் ஸ்தாயி முடிந்த சுரத்திற்குமுள்ள ஓசையில் பாதி ஓசை பெற்று 1(1/2) போல் வரும். ஒன்றுக்கு அரையாயுள்ள சுரம், துவக்கும் சுரத்தோடு சத்தி, சிவம் போலவும், ஸ்திரீ, புருஷர் போலவும் அணுப்பிரமாணமும் வேறுபடாமல், ஊடும் பாவும் போல ஒற்றித்து நிற்கும். தொட்ட ராசிக்கு ஏழாம் ராசி, களத்திரஸ்தானமென்று சோதிடத்தில் வழங்குகிற தாயிருந்தாலும், ஆதார ஷட்ஜம் 0 பூச்சியம் என்ற கணக்கின்படி, ஏழு ஏழாகத் தொட்ட இடம் விட்டு எண்ணிக் கொண்டு போவோமேயானால், சோதிடத்திலுள்ள கணக்கின்படி, எல்லாப் பலமும், சத்துரு மித்துரு ஸ்தானங்களும், களத்திர புத்திர ஸ்தானங்களும், மாதுர் பிதுர் ஸ்தானங்களும், அவைகளின் உபயோகமும், ஒவ்வொரு ராகத்தில் வரும் ஒவ்வொரு சுரத்திற்கும் காண்போம். சத்துரு சுரங்களை நீக்கவும் மித்துரு சுரங்களைக் கூட்டவும், அது ஏதுவாயிருக்கும். அதன் விபரம் இதன் பின் பார்ப்போம். 8. கிரகமாற்றும் முறையில் வட்டப்பாலையில் பிறக்கும் பன்னிருபாலையும் அவற்றின் சக்கரங்களும். சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 93.] 72-78 "வன்மையிற் கிடந்த தார பாகமு மென்மையிற் கிடந்த குரலின் பாகமு மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத் தளராத் தாரம் விளரிக் கீத்துக் கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந் தன்கிளை யழிவுகண் டவள்வயிற் சேர" என்பது "தார பாகமுங் குரலின் பாகமு நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப முன்னர்ப் பாகமும் பின்னர்ப் பாகமும் விளரிகுர லாகு மென்மனார் புலவர்"
|