பக்கம் எண் :

100அறமும் அரசியலும்

வாழ்க்கையிலும், தொழில் துறையிலும் தனியுரிமையும் நலமும் அடிப்படையாக
அமையும் என்றும் தெளிய வேண்டும்.

கருத்தும் உரிமையும்

     கருத்தை வளர்க்கும் துறையிலும் கருத்தை வெளியிடும் துறையிலும்
தனியுரிமை வேண்டும் என்று கண்டோம். இன்று அந்த உரிமை இல்லையா?
இருக்கின்றது. ஆனால் தவறான பாதையில் திரும்பியிருக்கின்றது.

     எண்ணமே வாழ்வு. பலர் எண்ணிய எண்ணங்களே இன்று கலையாகவும்
சமயமாகவும் அரசியலாகவும் அமைந்துள்ள எல்லாவற்றிற்கும் காரணம்.
ஆகவே எதிர் காலத்தில் அமையும் கலை, சமயம், அரசியல் எல்லாம் இன்று
எண்ணும் எண்ணங்களைப் பொறுத்து அமையும். ஆகவே எண்ணங்களே
உலக வாழ்க்கையின் வித்துக்கள். இந்த எண்ணங்கள் வளரவும் வெளிப்படவும்
தரும் உரிமையே உலக வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் உரிமை.

     இன்று வீசும் காற்று நாளை வரும் காற்றுக்குத் தடையாக நிற்கக்கூடாது.
இன்று ஓடும் நீர் நாளை வரும் வெள்ளத்திற்குத் தடையாக நிற்கக்கூடாது.
நின்றால் தேக்கம் ஏற்படும், தீமை ஏற்படும், நோய் பரவும். அவை போலவே
இன்று உள்ள கலையும் சமயமும் அரசியலும் நாளைய வளர்ச்சிக்குத்
தடையாக நிற்கக்கூடாது. ஆனால் இன்று கற்கத் தொடங்குகின்றவர்களுக்கு
இந்தத் தடைகளே உள்ளன.