பக்கம் எண் :

102அறமும் அரசியலும்

வைத்திருப்பது ஒரு வகையில் தீமை செய்யும். ஆனால் வெளி உலகம்
தெரிந்த பிறகு குழந்தையை வெளியே போகவொட்டாமல் தடைப்படுத்தினால்
அதைவிடப் பெரிய, பொல்லாத தீமை விளையும் அல்லவா? அந்தக் குழந்தை
உடனே வீட்டைச் சிறையாக எண்ணும்; பெற்றோரைப் பகைவராக எண்ணும்;
அன்போடு விளையாடுவதை விட்டு அழிவு வேலையான குறும்புகளில்
தலையிடும். இதைத்தான் பொது மக்களும் கருத்து வெளியிடத் தடை
நேர்ந்தபோது செய்கின்றார்கள். வாழ்கின்ற வாழ்க்கையை வெறுக்கின்றார்கள்;
ஆளும் தலைவர்களைக் கொடியவர்களாகக் கருதிக் குறை கூறுகின்றார்கள்;
ஆக்கவேலையை அடியோடு மறந்து அழிவு வேலையில் முனைந்து நாட்டை
அல்லல்படுத்துகின்றார்கள். கருத்தை வெளியிடும் உரிமைக்குத் தடை
நேரும்போது தான் இவ்வளவும் செய்கின்றார்கள்; கலை முதலியவற்றையும்
பழிக்கின்றார்கள்.

     இந்தத் துறையில் தனியுரிமையைத் தடைப்படுத்துவது எவ்வளவு பெரிய
தீமை என்பதை உலகம் இன்னும் உணரவில்லை. சிறந்த அமைப்பாகிய
குடியாட்சி முறை (ஜனநாயக முறை) குறையுற்று வருவதற்கெல்லாம் இதுவே
காரணம் என்பதை உலகம் இன்னும் உணரவில்லை. அறம் வேறு அரசியல்
வேறு என்று பிரித்து அறத்தின் சிறப்பைக் குறைத்து வருவது இந்தக் கொடிய
நிலையே என்பதை உலகம் இன்னும் உணரவில்லை.

     "புகை வண்டியில் ஏறுங்கள்; ஆனால் எங்கே போக வேண்டும் என்று
சொல்லும் உரிமை உங்களுக்கு இல்லை; வண்டியை ஓட்டும்