பக்கம் எண் :

134அறமும் அரசியலும்

ஊர் மன்றங்களை வலுப்படுத்தி, அவற்றின் வல்லமையே தலைமை
அமைப்பின் வல்லமையாகக் கொண்டால், நாட்டுக்கும் நன்மை; உலகத்திற்கும்
நன்மை; போர்களைத் தடுக்க அறிஞர்கள் முயலும் முயற்சிக்கும் இது
பெருந்துணையாகும்.

     ஆனால் இவ்வாறு உணராமல், முயலாமல், அமைக்காமல் இருப்பதற்கு
யார் காரணம்? எது காரணம்? செல்வாக்கின் கூட்டுப் பண்ணைகளான
கட்சிகளே காரணம்; கட்சியமைப்பே வலிய தலைமை அமைப்பால்,
கட்டுப்படுவது; ஊர்க்கட்சிகளுக்கு உரிமை தராமல், தலைமைக் கட்சி மட்டும்
வாழப் பார்ப்பது; ஆகவே வலிய தலைமை அமைப்பை உடைய கட்சி ஒன்று,
அது எதுவானாலும் சரி, அது அமைக்கும் ஆட்சிமுறை எப்போதும் வலுவான
தலைமை அமைப்பையே போற்றி நிற்கும்; இந்த உண்மையை உலகெங்கும்
காணலாம். புலி, புலிக் குட்டியைத்தான் ஈன்று வளர்க்கும்; மான்
கூட்டத்தையா வளர்க்கும்?

     இவற்றை எல்லாம் பொறுமையோடு எண்ணிப் பார்த்தால், அறத்தின்
ஆற்றலை மறந்து அமைக்கும் கட்சித் தேர்தல் எவ்வெவ்வாறோ வளர்ந்து
வளர்ந்து, எதிர் கட்சியைப் படைத்து ஒன்றை ஒன்று தாக்கி அழியச் செய்து,
அரசியல் ஆட்சி பெற்றபோது ஒரு நாட்டை ஒரு நாடு தாக்கும் போராக
முற்றி, உலகப் போராக முதிர்ந்து அழிவுக்கலையை அளவில்லாமல்
பெருக்கிவிடுகின்றது. 'அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு' என்று
தனிப்பட்டவருக்குத் திருவள்ளுவர் சொன்ன உண்மை, கட்சிகளுக்கும்
பொருந்துகின்றது. நாடுகளுக்கும்