பக்கம் எண் :

உரிமைப் பஞ்சம் 133

உணர்கின்றார்கள். ஆகவே, வலிய தலைமை அமைப்பு ஒரு நாட்டில்
இருப்பதே போருக்கு வித்து என்று சொல்லாம். தன் நாட்டில் எத்தனையோ
ஊர்களின் ஆட்சியுரிமையைப் பறிக்கும் பயிற்சி கொண்ட தலைமை அமைப்பு,
தன்னைவிட வலிமை குறைந்த அரசுகளை அடக்கி ஆளவே முயலும். இந்தப்
பயிற்சியும் முயற்சியுமே உலகப்போரை நடத்தத் தூண்டுகோலாகின்றன.

     இதற்கு மாறாக, ஊராட்சி முறையும் ஊர் மன்றங்களின் அடிப்படை
கொண்டு நடக்கும் பாராளுமன்றமும் இருந்தால், அந்தத் தலைமை அமைப்பு
ஒருநாளும் போர் வெறி கொள்ளாது. அப்போது உள்ள அமைச்சர் குழு
போர் வெறி கொண்டாலும், "நாளைக்கு எதிரிகளின் குண்டுகள் நம் தலை
மேல் தானே விழும்? அதற்கு வரவேற்பு செய்வதா நம் கடமை? என்று
ஊர்தோறும் மனச்சான்று எழுந்து அமைச்சர் குழுவின் போக்கைத் தடுக்கத்
திரளும். வேறுவழி இல்லையானால் பெரும்படை திரட்டிப் போர்க்குத்
துணை செய்யும். அப்போது பெரும்பாலான ஊர் மன்றங்களின் விருப்பமே
நிறைவேறும். போர் வேண்டாம் அல்லது வேண்டும் என்று முடிவு செய்வது
தலைவர்களின் வெறியைப் பொறுத்து இருக்கும். வேண்டாம் என்று
ஒதுங்குகின்ற எந்த நாடும் போரால் அவ்வளவு அழிவு பெறுவதில்லை.
போர் வேண்டாம் என்று மறுக்கக் கூடிய அவ்வளவு உணர்வு பெற்ற ஆட்சி
உரிமை ஊர் மன்றங்களுக்கு இருந்தால், அந்த நாட்டின் மேல் வேறு
எந்தநாடும் படையெடுக்கவும் முடியாது; படையெடுத்துக் கைப்பற்றினாலும்
அடக்கியாள முடியாது. ஆகவே, இப்படி வலிய தலைமை அமைப்பு என்று
ஆசைகொண்டு நாட்டு மக்களின் உரிமையைப் பறிப்பதை விட,