| கிடைத்தனவோ, அவர்களுக்கு உப்பிட்ட கஞ்சியும் வயிறு நிரம்பக் கிடைப்பதில்லை. ஆகவே, தம் நன்மைக்கு வேண்டியவற்றைச் சிறப்பாக அமைத்துக் கொண்டு, அமைத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒரு முயற்சியும் செய்யாமல் கவலையில்லாமல் கைவிடுவது பாவம் அல்லவா? இவ்வாறு ஒதுக்கிய தீவினை தொடராமல் விடுமா? அது தொத்து நோய்கள் குடிசைகளில் பரவும் போது விளைகின்றது. குடிசைகளில் கிளம்பிய தொத்து நோய்க் கிருமிகள் என்ன தடுத்தாலும் தடுக்க முடியாமல், பூந்தோட்ட வீடுகளையும் அணுகி அங்கு உள்ளவர்களையும் பற்றிக் கொள்கின்றன. வளமான வீடும் நலமான உடலும் இருந்தும், இந்தத் தொத்துநோய்க் கிருமிகளின் தொல்லைக்கு இரையாக வேண்டி வருகின்றது. அந்தப் பூந்தோட்ட வீடுகளில் தொண்டுமனம் உடைய நல்ல செல்வர்களும் ஒருவர் இருவர் இருப்பது உண்டு. ஆனால் ஓர் இனமாகச் செய்த தீவினைக்கு அவர்களும் ஆளாக நேர்கின்றது. சேமிப்பு - ஊழ் சேமித்து வைக்கும் ஏற்பாடும் ஒரு சிலருக்கே வாய்க்கின்றது. பல திங்களுக்கு வேண்டிய அறுசுவை உணவும், பல ஆண்டுகளுக்கு வேண்டிய அழகான ஆடைகளும், பல தலைமுறைகளுக்கு அரண் செய்யக்கூடிய அரிய வீடுகளும் ஏழைகளுக்குக் கிட்டுமா? செல்வர்களுக்கே இவை கிடைப்பவை. ஆனால், ஏழைகளின் உழைப்பு இல்லையானால் அறுசுவை உண்டி ஏது? அழகான ஆடை ஏது? அரண்மனை ஏது? உழைத்து எல்லாவற்றையும் அமைத்து உதவிய மக்களைப் புறக்கணித்துவிட்டுத் தமக்கு மட்டும் நெடுங்காலத்திற்கு |