| வேண்டியவைகளைச் சேர்த்துக் கொள்ளும் தீவினை எவ்வாறு உருத்து வந்து ஊட்டுகின்றது? போர்க்காலங்களில் அது விளைகின்றது. அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டாகும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வமொன்று உண்டாக வைக்கற்பாற்று அன்று. என்பது பண்டைக்காலத்தில் அந்தத் தீவினை உருத்துவந்த கோலத்தைக் காட்டுகின்றது. நேற்று அறுசுவை உணவை இல்லாள் அமர்ந்து ஊட்டும் காட்சியாம்; இன்றைக்கோ கையில் ஒன்றும் இல்லாத வறுமையோடு பிறர் வாயில் தேடி இரக்கும் காட்சியாம். இதோடு நிற்கவில்லை. யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. என்பதில் உரிமையாக மணந்த மனைவியையும் இழந்து வாடுவாராம். மனைவி இறந்து போவதானாலும் அவ்வளவு கவலை இருக்காது. மாற்றார் கைப்பற்றிக் கொண்டு போய் விடுவார்களாம். தோற்றவர்களின் மனைவியாரை வென்றவர்கள் அடிமையாக்கிக் கொண்டுபோவது அந்தக் காலத்துக் கொடுமை. இன்று இந்த நிலைமை மாறிவிட்டது. ஆனால் அந்த ஊழ்வினை வேறு வகையில் விளைகின்றது. |