பக்கம் எண் :

32குறள் காட்டும் காதலர்

கின்றான்    என்றும்   பலவகையாகக்   காவியங்கள்   ஆங்காங்கே
எடுத்துரைப்பதைக் காணலாம்.

சூரியன்     உலகைச்   சுற்றிவரவில்லை;   உலகமே  சூரியனைச்
சுற்றிவருகிறது  என்ற  அறிவு பிறந்தது; எல்லோருடைய  மனத்தையும்
கவர்ந்தது.  பழைய  கற்பனைகள் முன்னோர்க்கு அளித்த  இன்பத்தை
நமக்கு  அளிக்கவில்லை.  விஞ்ஞானம்  வேறு கற்பனை  வேறு என்று
உணர்ந்தே   காவியங்களைக்   கற்ற  போதிலும்  முன்னோர்  பெற்ற
இன்பத்தை  இந்தத்  துறையில்  நாம்  பெற   முடியாது.  ஏன் எனில்,
கற்பனையுலகத்தில்   திளைக்கும்போதே,    விஞ்ஞான   உண்மைகள்
ஒருபுறம்   உள்ளத்தைத்   தூண்டிவிடுகின்றன.   கனவு  காண்கிறவன்
நனவுலகத்து   நினைவே  இல்லாமல்   கனவுகண்டால்,  கனவுலகத்தில்
தடையின்றித்   திளைத்திருக்க    முடியும்,   கனவு  காணும்  போதே
நனவுலகத்து   நினைவும்  உடன்   தோன்றினால்,  கனவின்  ஆற்றல்
குறைகிறது,  விரைவில்  விழிப்பு   நேரக்  காரணமாகிறது. விஞ்ஞானக்
கல்வியால்    வளர்ந்த   அறிவும்    இவ்வாறே   பழைய   கற்பனை
இன்பத்திற்கு  இடையூறாக இருக்கிறது.  முழு இன்பம் பெற முடியாமல்
போகிறது; ஓரளவிற்கே கற்பனையின் பயனைப் பெற முடிகிறது.

மேகங்கள்    கடலுக்குச் சென்று கடல் நீரை மொண்டு  கொண்டு
மேலெழுந்து    வானத்தில்    உலாவுகின்றன   என்று    முன்னோர்
எண்ணினர்.  அதனால்,  அந்த  மேகங்கள்  அவர்களுக்கு  நல்ல பல
கற்பனைகளை   வளர்த்தன.  மழை  பெய்யக்  கனத்து வரும்  மேகம்,
முன்னோர்களின்   கண்ணுக்குக்   கர்ப்பம்   நிறைந்த   மகளிர்போல்
தோன்றின.   மேகங்கள்  கார்ப் பருவத்திற்கு முன் பெய்யும்  மழைநீர்,
பெண்கள்  குளத்தில்  புதுநீர்  மொள்ளும்முன்  பழைய நீரைக்  கீழே
கொட்டும்  காட்சியை  நினைவூட்டியது.  இந்தக் காலத்தில்  இத்தகைய
கற்பனைகள்    உள்ளத்தில்    நிலைப்பதில்லை.   இக்    காலத்துப்
பள்ளிக்கூடச்