பக்கம் எண் :

6. என்னிடம் சொல்லாதே31

6. என்னிடம் சொல்லாதே

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக நாம் பெற்றுள்ள நன்மைகள் பல.
ஆனால் என்னென்னவோ இழந்து விட்டு இந்த நன்மைகளைப்
பெற்றுள்ளோம். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற
முடிகிறது. இந்த உலக வாழ்வு இவ்வாறு அமைந்துள்ளது.

சூரியன் உலகத்தைச் சுற்றிவருகிறான் என்று முன்னோர்கள்
நம்பினார்கள். அந்த நம்பிக்கையே இன்று நமக்கும் இருக்குமானால்,
நம்முடைய கற்பனைக்கு எவ்வளவோ உதவியாக இருக்கும். வீட்டுத்
தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே சூரியன் எழுந்து
வருவதைப் பார்த்து, "இந்தக் கோளம் நம்மை நாள்தோறும்
சுற்றிவருகிறது; சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இதோ
இன்றைக்கும் நம்மை--நாம் வாழும் மண்ணுலகத்தைச் சுற்றிவரப்
புறப்பட்டுவிட்டது. கடலிலிருந்து எழுந்துவிட்டது" என்றெல்லாம்
எண்ணிக் கொள்வோம். இதுபோன்ற எண்ணமே நம் முன்னோர்க்குப்
பலவகைக் கற்பனையை வளர்த்திருக்கிறது. கதிரவன் கீழ்த் திசையில்
சினம் கொண்டு எழுந்தான் என்றும், மேற்குக் கடலில் மூழ்கிச் சினம்
தணிந்தான் என்றும், ஏழு குதிரை பூட்டிய ஒற்றைச் சக்கரம் உடைய
தேர் ஏறி உலாவு