பக்கம் எண் :

34குறள் காட்டும் காதலர்

கொடுப்பதில்லை என்ற வழக்கம் பல குடும்பங்களில் இருந்து
வந்தது. யாரேனும் வந்து பெண் கேட்டால், கொடுக்க மாட்டோம்
என்று மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. "உங்கள் ஊர்
ஆற்றிற்கு அப்பால் அந்தக் கரையில் உள்ளது! ஆகையால் பெண்
கொடுக்க மாட்டோம்" என்று மறுக்கும் வழக்கம் இருந்து வந்தது.
இந்தக் காலத்தில் ஆறு கடந்து மட்டும் அல்லாமல் நாடு கடந்தும்,
கடல் கடந்தும் பெண் கொடுக்கத் தயங்குவதில்லை.

இதிலிருந்தே பழங்காலத்தில் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்
இருந்துவந்த துன்பம் எப்படிப்பட்டது என்பதை உணரலாம்.
அக்காலத்தில் பிரிந்து சென்றவரிடமிருந்து செய்தி எட்டுவதே அரிதாக
இருந்தது. பிரிந்தவரே திரும்பி வந்து வீடு சேர்ந்த பிறகுதான்
வீட்டார்க்கு நம்பிக்கைவரக் கூடிய நிலைமை இருந்தது.

இன்று பிரிவு என்பது கவலைப்படத் தகாத நிகழ்ச்சி ஆகி விட்டது.
தொழிற்சாலைக்குப் பிரிந்து செல்வதும், வெளியூர்க்குப் பிரிந்து
செல்வதும் சிறிதளவே வேறுபாடாகத் தோன்றுகின்றன.
வெளிநாட்டுக்குப் பிரிந்து செல்வது வெளியூர்ப் பிரிவைவிட ஒரு சிறிது
துன்பமானதாகத் தோன்றுகிறது. அவ்வளவே அன்றி,
பெருந்துயரத்திற்கு இடமில்லை.

திருநெல்வேலியில் உள்ள தாய் தன் மகனைச் சென்னைக்
கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறாள். யாழ்ப்பாணத்தில் உள்ள
தந்தை கல்விக்காகத் தன் மகனைக் கல்கத்தாவிற்கு அனுப்புகிறான்.
இதற்கு அடுத்தபடியாக, பெற்றோர் தம் மக்களை--ஆண்களை மட்டும்
அல்லாமல் பெண்களையும்--கல்வி முதலிய பயன் கருதி
அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் அனுப்புகிறார்கள்.

பெற்றோர்க்கும், மக்களுக்கும் இடையே நிகழும்பிரிவு போலவே
காதலர்க்கு இடையிலும் கவலை இல்லாமல் பிரிவு நிகழ்கின்றது.