பிரிந்தபின், காதலன் தன் நிலைமையை அடிக்கடி காதலிக்கு அறிவிக்கத் தபால் தந்தி முதலிய வாய்ப்புகள் உள்ளன; இவ்வாறே காதலியும் காதலனுக்குத் தன் நிலைமையை அறிவிக்க முடிகின்றது, முகத்தை நேரே கண்டு வாய் மலர்ந்து பேசுவது இல்லையே தவிர, எங்கே எந்நிலையில் இருந்தாலும் உள்ளம் உறவாட வழி இருக்கிறது, தொலைபேசி வாயிலாக வெளிநாட்டிலிருந்தே பேசவும், நெடுந்தொலைவிலிருந்தவாறே செவி குளிரக் கேட்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் பிரிவு என்பது பெருந்துயர் தருவதற்கு இடம் இல்லை. பழங்காலக் காதலர்க்கு இந்த நல்ல வாய்ப்புகள் இல்லை, அதனால் பிரிவு என்பது பெருந்துயர் தருவதாக இருந்தது. பிரிந்த நாள்முதல் மறுபடியும் வந்து சேரும் நாள் வரையில், பிரிவு என்பது மரணத்திற்கு அடுத்த துயரம் போலவே இருந்தது எனலாம். இத்தகைய துயர அனுபவத்தை இன்று இன்னது என்று உணர்வதே அரிது. விஞ்ஞான வளர்ச்சியால் நேர்ந்த வாழ்க்கைநிலை மாறுதல், இன்று பிரிவில் இருந்த துன்பத்தைப் பலவகையிலும் குறைத்து அன்றாட நிகழ்ச்சியாக்கி விட்டது. அதனால் பழங்கால மக்களின் உணர்வு நாம் உணர முடியாத ஒன்று ஆகிவிட்டது. கற்று வல்லவர்களாகிய புலவர்களும் பழங்காலத்தில் ஒருவரை ஒருவர் பிரியும்போது வருந்திக் கலங்குவார்களாம்; "உள்ளப் பிரிதல். . , புலவர் தொழில்" என்கிறார் திருவள்ளுவர், "இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும் என நினையுமாறு" பிரிவதாகப் பரிமேலழகர் விளக்குகிறார். புலவரிடைப் பிரிவே இவ்வாறு ஏக்கம் விளைத்தது என்றால், காதலரின் பிரிவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எண்ணி உணரலாம். |