இந்தக் காலத்துக் காதலர் -- கணவன் மனைவி-- வாழ்க்கை தொடங்கியபின், "உன்னைவிட்டுப் பிரிய மாட்டேன்" என்று உறுதி கூறுவதும் இல்லை. 'பிரியாமலிருக்க வேண்டும்' என்று உறுதிமொழி கேட்பதும் இல்லை. பழங்காலத்தில் காதலன் காதலிக்குக் கூற வேண்டிய முதல் உறுதி, "உன்னைவிட்டுப் பிரியமாட்டேன்" என்பது. காதலி காதலனைப் பற்றிக் கொள்ளும் முதல் ஐயப்பாடும், 'என்னைவிட்டு வெளிநாட்டுக்குப் பிரிந்து செல்வாரோ?' என்பதே. "காதலரைக் காத்துக்கொள்வதானால் அவர் பிரியாமல் காத்துக்கொள்ள வேண்டும், அவர் பிரிந்தால் மீண்டும் கூடுதல் அரிது" என்று காதலி எண்ணினாள். ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல் மற்றுஅவர் நீங்கின் அரிதால் புணர்வு(குறள், 1155)
பிரிவுபற்றி நினைக்கிறாள் அவள். நினைக்கவும் துன்பம் விளைவதை உணர்கிறாள். மற்றப் பெண்கள் கணவன்மாரைப் பிரிந்து உயிர் வாழ்கின்றார்களே, எப்படித்தான் அவர்களால் முடிகிறதோ என்று எண்ணி வியப்படைகிறாள். மற்றப் பெண்கள் பிரிவுக்கு உடன்படுகிறார்கள், பிரியும் போது துன்பத்தால் வருந்தாமலிருக்கவும் அவர்களால் முடிகிறதே; பிரிந்தபின் பொறுத்திருக்கவும் முடிகிறதே; பிரிந்து சென்றபின் உயிர் வாழவும் முடிகிறதே; உலகத்தில் இப்படியும் பெண்கள் பலர் வாழ முடிகிறதே என எண்ணுகிறாள்.
அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர்(குறள், 1160) |