பக்கம் எண் :

46குறள் காட்டும் காதலர்

மீண்டும் அவள் தான்படும் துன்பத்தை உணர்கிறாள்.
கொடியவராய்த் தன்னைப் பிரிந்து வாழும் காதலரே இந்தத்
துன்பத்திற்குக் காரணம். ஆனால் இந்தத் துன்பமும் பகலில்
அவ்வளவாக இல்லாமல் இராக் காலத்தில் மிகுவதால் இரவும் ஒரு
காரணமாக இருக்கிறது. "எண்ணிப்பார்த்தால், இந்த இராக் காலம்
என்மேல் வேண்டும் என்றே பகைவைத்து வருத்துவதாகத் தெரிகிறது.
முன்னெல்லாம் இவ்வாறு நீண்ட நேரம் இராக் காலம் இருப்பதில்லை.
இப்போது என்னை வருத்துவதற்கென்றே நீண்டதாய்க் கழிகிறது.
அதனால் என்னைப் பிரிந்த காதலரின் கொடுமையைவிட இராக்
காலங்களே கொடியவை."

கொடியார் கொடுமையின்
தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா. (குறள், 1169)

மகிழ்ச்சியாக இருக்கும்போது காலம் மிக விரைவாகக்
கழிந்துபோகும். ஒருநாள் அரைநாள் போல ஒரு மணி அரை
மணிபோலக் கழிந்துபோகும். ஆனால் துன்பத்தால் வருந்தும்போது
அதற்கு மாறாக, ஒரு நாள் இரண்டு நாள் போலவும், ஒரு மணி மூன்று
மணி நேரம் போலவும் மெல்லக் கழிவதாகத்தோன்றும். காதல்
துன்பத்தால் வருந்தும் காதலி இராக் காலம் நீண்டநேரம் இருப்பதாக
உணர்வதற்குக் காரணம் அதுவே. அதனால்தான் "இந்நாள் நெடிய
கழியும் இரா" என்கிறாள். மனம் போல வாழ்வு என்பார்கள். மன
நிலைக்கு ஏற்பவே வாழ்வும், அதற்குக் கருவிகளான காலம்
முதலியனவும் உணரப்படுகின்றன.