9. கண்களின் இன்னல் அடிக்கடி துயரப்பட்டு வருந்துகிறவர்கள், சில வேளைகளில் தங்கள் மனம் இப்படி இருக்கிறதே என்று மனத்தையே நொந்துகொள்வார்கள். "நானும் எனக்கு எவ்வளவோ உறுதிகள் சொல்லிப் பார்க்கிறேன். ஆனாலும் என் மனம் கலங்கிப் போயிருக்கிறது" என்கிறார்கள். இவர்கள் இப்படி நெஞ்சம் கலங்கி வாடுவது உண்டு. பிறகு சிறிது நேரத்தில் நெஞ்சம் தெளிந்தவுடன், கவலைப்பட்டுப் பயன் என்ன? எவ்வளவோ தெரிந்திருந்தும் நான் இப்படி ஒவ்வொரு வேளை வீணாகத் துயரப்படுகிறேன்" என்று தெளிவாகச் சொல்கிறார்கள். கோபம் கொள்கிறவர்களும் இவ்வாறே அது தணிந்த பிறகு, "என்ன, போங்கள். ஒவ்வொரு வேளையில் நாள் இப்படி ஆகிவிடுகிறேன். பொறுக்க முடியாத கோபம் எனக்கு வருகிறது. பிறகு எண்ணிப் பார்த்தால், பொறுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. என்ன செய்வது?" என்று வருந்திச் சொல்கிறார்கள்; சில வேளைகளில் தஙகளைக் குறித்தே வருந்துவதும் உண்டு; நகையாடிச் சிரிப்பதும் உண்டு. துயரம், சினம் முதலிய உணர்ச்சிகள் வரும்போது மட்டும் அல்லாமல், காதல் உணர்ச்சிக்கு ஆட்பட்ட போதும் இவ்வாறு |