அவளுக்கு ஒருபோதுதும்மல் வருகிறது. அது அரை குறையாக நிற்கிறது. தும்மல் தொடங்கி அடங்கி நின்றுவிடுகிறது. பிறர் நினைப்பதால் ஒருவர்க்குத் தும்மல் வருகிறது என்பது தமிழரிடையே இருந்துவரும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை காதலியின் சிந்தனையைத் தூண்டுகிறது. "காதலர் நம்மை நினைக்கின்றாரோ? ஆனால் முழு அன்பு இல்லாதபடியால் நன்றாக நினைக்காமல், நினைத்தவுடனே மறந்து விடுகிறாரோ? அதனால்தான், தும்மலும் வருவதுபோல் தொடங்கி உடனே அடங்கிவிடுகிறது" என்று எண்ணுகிறாள், நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். (குறள், 1203) "நான் மட்டும் ஓயாமல் எந்நேரமும் அவரை நினைத்தபடி இருக்கின்றேனே. அவ்வாறு அவர் என் மனத்தில் இடைவிடாமல் இருப்பதுபோல், அவருடைய நெஞ்சில் யானும் இருப்பேனா?" யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். (குறள், 1204) ஒருமுறை காதலனிடம் குறைகாணாமல் அவனுக்கு உள்ள கடமை நெருக்கடியை உணரும் மன நிலையில் இருந்தாள். அப்போது, தான் அடிக்கடி நினைப்பது காதலனுடைய கடமைக்கு இடையூறு ஆகுமோ என்று எண்ணினாள். ஆயினும், எவ்வளவு மிகுதியாகத் தான் காதலனை நினைத்தபோதிலும், காதலன் தன்மேல் சினம் கொள்ளாமல் இருப்பதைக் கருதினாள். "இதற்குக் காரணம், அவளுடைய காதலின் சிறப்பே" என்று உணர்ந்தாள். |