பக்கம் எண் :

10. பிரிவுத் துன்பம்55

வீழ்வாரின் இன்சொல் 
   பெறாஅது உலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.               (குறள், 1198)
 

அன்று     மாலையே ஒரு செய்தி கேள்வியுற்றாள். வெளியூர்க்குச்
சென்ற   சிலர்  அந்தக்  காதலனைக்  கண்டனர்;   அவன்  அங்குச்
செய்யும்  கடமையைப்  பற்றி  அறிந்தனர்.  ஊருக்குத்   திரும்பியதும்
அவனைப்  பற்றிப்  புகழ்ந்து  பேசினர்.  அந்தச்  செய்தி  காதலியின்
செவிக்கு   எட்டியது.  உடனே  அவளுடைய  உள்ளம்   குளிர்ந்தது.
காதலர்  நம்மிடம்  அன்பு  செலுத்தாவிட்டாலும்,   அவரைப்  பற்றிய
புகழைக்    கேள்விப்பட்டாலும்,    அந்தச்     சொற்கள்   செவிக்கு
இனியவையாக உள்ளன" என்று உணர்ந்தாள்.

நசைஇயார் நல்கார் 
   எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.                  (குறள், 1199)

திரும்ப     திரும்ப அவரையே ஏன்  நினைத்துக்  கொண்டிருக்க
வேண்டும்  என்று  அவள்  தன்னைத்  தானே  கேட்டுக் கொண்டாள்.
"மனம்    அடிக்கடி     காதலரையே    நினைக்கின்றது.   அவ்வாறு
நினைப்பதிலும் ஒருவகை  மகிழ்ச்சி  இருக்கிறது. அதனால்தான் பிரிந்து
வாடும்போதும்   திரும்ப   திரும்ப    நினைக்கின்றது.  இவ்வகையில்
கள்ளைவிடக்  காதல்  மேலானதுதான்.  நினைத்தாலும்  தீராத  பெரு
மகிழ்ச்சியைக்  காதல்  தருகிறது.  அந்தத் தன்மை கள்ளுக்கு இல்லை.
ஆதலால் கள்ளைவிடக் காதல் இனிதே" என்கிறாள்.

உள்ளினும் தீராப் 
   பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காதல் இனிது.                   (குறள், 1201)