என்ன பாடுபட்டாலும் தடுக்க முடிவதில்லை. அது அன்புடையவர்களைத் திரும்ப திரும்ப நாடி அவர்களையே விரும்புகிறது. காதலும் ஒருவகை அன்பின் முதிர்ச்சியே. ஆகையால், காதலர்களின் நெஞ்சமும் இவ்வாறு நெகிழ்ந்து உருகும் இயல்பு உடையதே. கொழுப்பைத் தீயில் இட்டால் உருகாதிருக்க முடியுமோ? காதலர் நெஞ்சம் அது போன்றது. நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சம் என்கிறார் திருவள்ளுவர். அதனால் காதலனைக் கடிந்துரைக்க வேண்டும் என்றுகாதலி முயன்றாலும், அம்முயற்சி தோற்றுப் போகிறது. வேண்டுமென்று நெஞ்சத்தைத் திடப்படுத்திக்கொண்டு பாசாங்காக நடிக்க முயன்றாலும் முடிவதில்லை; நெஞ்சம் உருகி நெகிழ்ந்துவிடுகிறது, அவன் எங்கோ வெளியே போயிருந்து வருகின்றான். அவள் தன் உள்ளத்தில் உள்ள அன்பை மறைத்து அவன்மேல் சினம் கொண்டவள் போல் நடித்துப் பார்க்கவேண்டும் என்று முயல்கிறாள். அவனிடத்தில் தவறு இல்லையானாலும், தவறு இருப்பதுபோல் வைத்துக்கொண்டு பிணங்கவேண்டும் என்று முயல்கிறாள். அவ்வாறு ஊடுவதால் பயன் உண்டு. தன் சினத்தைத் தணிப்பதற்காக அவர் மிகுதியான அன்பு காட்டி வேண்டுவார் என்று அவள் ஊட விரும்புகிறாள். இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு, (குறள், 1321) ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. அவளால் ஊடல் கொள்ள (பிணங்கியது போல் நடிக்க) முடியவில்லை. அவனைக் கண்டவுடன் அவளுடைய நெஞ்சம் நெகிழ்ந்து விடுகிறது. தன் முயற்சி தோற்றதைக் கண்ட அவள், தன் |