17. காதல் நெஞ்சம் ஒரு பொருளின்மேல் விருப்பம் வளர்ந்துவிட்டபிறகு, மனம் அந்தப் பொருளை எளிதில் மறக்காது. அது உடம்புக்கு கெடுதி என்று மருத்துவர்கள் சொல்லித் தடுத்த போதிலும், மனம் அதையே மறுபடியும் மறுபடியும் நாடும். காப்பி, தேநீ்ர், புகையிலை முதலியவற்றைச் சிலநாள் விட வேண்டும் என்று முயல்கின்றவர்கள் அவ்வாறு செய்ய முடியாமல் வருந்துவதைக் காண்கிறோம். அன்போடு பழகிவிட்ட ஒருவரிடத்திலும் மனம் அவ்வாறு மறக்க முடியாமல் திரும்ப திரும்ப நாடுகிறது. ஏதோ காரணம் பற்றி மகனைக் கடிந்து வெறுக்கவேண்டும் என்று தாய் எவ்வளவு முயன்றாலும், முடியாமல் மீண்டும் மீண்டும் நெஞ்சம் நெகிழ்ந்து அன்பு செலுத்துகிறாள். அன்புடைய நண்பரிடத்திலும் அவ்வாறே மனம் நெகிழ்கிறது. நண்பர் ஒருவரிடத்தில் நெடுங்காலம் பேசாமல் பழகாமல் இருக்கலாம். ஆனால் அவர் நோயால் துன்பப்படுகிறார் என்று அறிந்தால், உடனே நம் மனம் நம்மை மீறி உருகிவிடுகிறது. கண்ணீரும் சொரிகின்றோம்; கலங்குகின்றோம். அதனால் தான் "அன்பிற்கு உண்டோ அடைக்குந் தாழ்?" என்கிறார் திருவள்ளுவர். அன்பால் நெகிழ்ந்து உருகும் உள்ளத்தை |