வீட்டோடு அமைந்து நிற்பவள்; கணவன் வெளியுலகில் பலருடன் பழகும் கடமைகள் உடையவன். இது பழைய மரபின்படி அமைந்த வாழ்க்கை. இதன்படி, பிறர்தொடர்பு ஏற்படுவதற்குக் கணவன் வாழ்க்கையில் இடம் உண்டு. அதனால் மனைவி விழிப்போடு இருந்து தன் உரிமைக்காகப் போராடிக் காத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மற்றொரு காரணம். ஒரு பெண் தன் அழகு தன் கணவனுக்கே உரியது என்ற வரையறையைத் தானே வகுத்துக் கொண்டு, தன் அழகை பிறர் கண்டு போற்றுமாறு முந்திக்கொள்ளாமல் அடக்கத்தோடு வாழும் பழைய வாழ்க்கை முறை. அதன்படி, அவள் தன்னைப் பிறர்க்கு உரிய கவர்ச்சிப் பொருளாக ஆக்கிக் கொள்ள மறுத்து விடுகிறாள். அதனால் பிறர் நெருங்கவும் விரும்பவும் அதைக் கண்டு கணவன் ஐயுறவும் இடம் இல்லாமல் செய்து விடுகிறாள். அதனால் கணவன் தன் அன்பின் உரிமைக்காகப் போராட இடம் இல்லாமல் போகிறது. காதலன் தன் காதலியின் முகத்தின் அழகைப் பாராட்டுதல் பற்றி வள்ளுவர் சில குறட்பாக்களை அமைத்துள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு: அவன் முழு மதியைப் பார்க்கிறான். அழகிய பெண்ணின் முகத்திற்கு முழுமதியை உவமை கூறும் வழக்கம் அவனுக்கு நினைவு வருகிறது. உவமை மகிழ்ச்சி தருகிறது. முகத்திற்கும் மதிக்கும் உள்ள ஒப்புமை பொருத்தமாக இருக்கிறது. தான் பார்க்கும் மதியையே பலரும் பார்த்துப் பாராட்டுகிறார்கள். அந் நிலையில் உடனே ஒரு குறை அவனுடைய மனத்தில் படுகிறது. "என் காதலியின் முகம் போலவே முழு நிலவும் அழகுடையதே; ஒளியுடையதே. ஆனாலும் நிலவை எல்லாரும் பார்த்துப் பாராட்டுகிறார்கள். பலரும் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்றே மதி வானத்தின் உயரத்தில் பலருடைய கண்ணுக்கும் தெரியுமாறு உலாவுகிறது. என் |