பக்கம் எண் :

98குறள் காட்டும் காதலர்

காட்டும் ஊடலும் உயர்ந்த ஊடலாக -- மாசற்ற ஊடலாக --
விளங்குகிறது.

திருவள்ளுவர் காட்டும் காதலன் வேறு எந்தப் பெண்ணுக்கும் தன்
உள்ளத்தில் இடம் தராதவன்; தன் மனைவி போலவே தானும்
கற்புநெறியைப் போற்றி வாழ்பவன். அவனிடம் ஒரு தவறும் காண
முடியவில்லை. அவன் என்றும் இவ்வாறே வாழவேண்டும் என்று
காதலி விரும்புகிறாள். தன் காதலனுடைய அன்பு எக்காலத்திலும்
இவ்வாறு தனக்கே உரிமையானதாக விளங்க வேண்டும் என்று அவள்
ஆசைப்படுகிறாள். அந்த ஆசையின் காரணமாகவே அவள் ஊடல்
கொள்கிறாள். அது, தவறு கண்டு கொள்ளும் ஊடல் அன்று; தவறு
நிகழாமல் காப்பதற்காகக் கொள்ளும் ஊடலாம்.

"அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய
அன்பை முழுதுமாகப் பெற முடிகிறது. அதனால்தான் ஊடுகிறேன்"
என்கிறாள்.

இல்லை தவறவர்க்கு
ஆயினும் ஊடுதல்

வல்லது அவரளிக்கு மாறு (குறள், 1321)

இத்தகைய ஊடல், காதல் வாழ்க்கைக்கு உப்புப் போல்
தேவையானதாம். ஆனால் இந்த ஊடலும் ஓர் அளவோடு அமைய
வேண்டுமாம். அளவுக்கு மீறினால் காதலனுடைய மனம் நோகும்
எல்லைக்குச் சென்று வி்ட்டால், அது உணவில் சிறிது உப்பு மிகுந்து
விட்டது போல் கெடுதியாக முடியுமாம்.

உப்பமைந் தற்றால்
புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல் (குறள், 1302)