பக்கம் எண் :

180தமிழியற் கட்டுரைகள்

கடுவிலைக்கும் வாங்கிக் குடிப்பான். அதையும், அவள் வீட்டிற்குள்ளிருந்து குடிக்க மறுப்பான்.

     தாழ்த்தப்பட்டவர் தவிர மற்றத் தமிழர் யாராயினும், அவல், கடலை, பொரி, அப்பம் (ரொட்டி) விற்பின், பிராமணன் தன் இனத்தான் விற்பது போன்றே கருதி வாங்குவான்.

     இன்குடிப்பும் தண்குடிப்பும் தாழ்த்தப்பட்டவன் புட்டியில் அடைப்பினும், பிராமணன் வாங்கத் தவறான். ஒரு தமிழனும் ஒரு பிராமணனும் இளமைமுதல் முதுமைவரை எத்துணை நெருங்கி நட்பாடினும், உண்டி வேளையில் மட்டும் அந் நட்பு முற்றும் நீங்கிவிடும். இதை இக் காலத்தும் பிராமணன் உயர்வாகக் கருதலாம். ஆயின், இது அநாகரிகமேயன்றி உயர்வாகாது.
     பிராமணன் தமிழன் இல்லத்தில் ஒருமுறை யுண்ணினும் அவன் உயர்வு போய்விடுமென்பதும், அதன்பின் விலைக்கன்றி இலவசமாகத் தமிழன் உணவளியான் என்பதும், பிராமணனுக்குத் தெரியும். அதனால் தான், நிலையாகப் பிராமணன் வாழவும் தமிழன் தாழவும் தன் குலக் கட்டுப்பாட்டை இறுகக் கடைப்பிடிக்கின்றான். இதனால், பிராமணன் உண்டிச் சாலையில் திருப்பதியிற்போற் பணங் குவிகின்றது; பிராமணன் இல்லாத வூரில், ஒரு பிராமணனுக்கு இலவச வீடும் நிலமும் வாழ்க்கைப் பொருளுங் கிடைக்கின்றன.
     இதை ஈகை அல்லது ஒப்புரவொழுகல் எனச் சிலர் கருதலாம். இதனால் தமிழ இனத்திற்கு நிலையாக நேரும் மானக் கேட்டையும் அடிமைத்தனத்தையும் அகக் கரண வளர்ச்சித் தடையையும் நோக்குதல் வேண்டும்.
     தமிழன் முதன்முதல் உலகில் நாகரிக விளக்கேற்றி வைத்தவன்; பகுத்தறி வடிப்படையில் மொழியை வளர்த்துப் பொருளுக்கும் இலக்கணங் கண்டவன்; கண் காணாததைக் காணவும் காது கேளாததைக் கேட்கவும் நெற்றிக் கண்ணை வளர்த்துக்கொண்டவன்; இறப்பு நாளை முன்னரே அறிந்து பணிமுடித்து அணியமாகி, மகிழ்ச்சியொடு உறவினரிடம் விடைபெற்றுச் சென்றவன்.
     கடந்த மூவாயிரம் ஆண்டாக, தமிழன் பிறப்பில் தாழ்ந்தவன் என்று சொல்லிச் சொல்லி அஃறிணை யாக்கப்பட்டுவிட்டதனால், மூத்த தலை முறையைச் சேர்ந்த தமிழருள் நூற்றிற் கெழுபத்தைவர் பகுத்தறிவை யிழந்து விட்டனர்.
  "பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"

(குறள். 972)

  "பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்"

(குறள். 505)