பக்கம் எண் :

உரையாசிரியர்கள்162

வாக்கியப் பிணைப்பு

    பிற உரைகளுக்கு இல்லாத சிறப்புகள் பல, இவ்வுரைக்கு உண்டு.
அதனால்தான் இது, மற்ற உரைகளைவிடக் கற்றோர் நெஞ்சத்தில் சிறந்த
இடத்தைப் பெற்றுள்ளது.

     ஒரு வாக்கியத்தை முடித்து மற்றொரு வாக்கியத்தைத் தொடங்கும்போது,
முடித்த வாக்கியத்தின் இறுதியில் உள்ள வினைமுற்றுச் சொல்லை,
வினையெச்சமாக்கி அதனைக் தொடங்கும் வாக்கியத்தின் முதலில் வைத்துச்
செல்வதை இவ்வுரை முழுவதும் காணலாம்.

     “ஒரு ஞான்று நீயும் ஆயமும் என்னிற் சிறிது நீங்கினாயாக, ஈங்கு
நின்றேன் ஒரு மணிச்சுனை கண்டேன்; கண்டு, வேட்கையான் ஆடுவான்
இழிந்தேன்; இழுச்சிக் குட்டம் புக்கேன்; புக்குத் “தோழியோ!” என நீ
கேளாயாயினாய் ஆக, ஒரு தோன்றல் வந்து தோன்றி எனது துயர்
நீக்குதற்காகத் தன்கை நீட்டினான்; நீட்ட யானும் மலக்கத்தான்
நின்கையெனப் பற்றினேன்; பற்ற வாங்கிக் கரை மேல் நிறீஇ நீங்கினான்.”

     இப்பகுதியில் வினைமுற்றும் வினையெச்சமும் தொடர்புடன்
அமைந்திருப்பதைக் காணலாம்.

தெளிவு

    நுட்பமான பொருளையும் அரிய கருத்தையும் இவ்வுரை மிகவும்
தெளிவாக விளக்குகின்றது. ஒருமுறை கற்றவுடன் கருத்து விளங்கிவிடுகின்றது.

     களவொழுக்கம் நன்மை பயக்கும் இயல்பினது என்பதைப் பின்வருமாறு
விளக்குகின்றது:

     “களவு என்னும் சொற் கேட்டு, காமம் தீதென்பதூஉம் அன்று; மற்றும்
அவை நல்ல ஆமாறும் உண்டு; என்னை, ஒரு பெண்டாட்டி தமரொடு
கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து,
விலக்குவாரை இல்லாத போழ்து உண்பல் என்றவிடத்து, அருளுடையான்
ஒருவன் அதனைக் கண்டு, ‘இவள் இதனை உண்டு சாவாமற் கொண்டு
போய் உகுப்பல்’ என்று அவளைக் காணாமே கொண்டுபோய் உகுத்திட்டான்;
அவளும் சன நீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது
காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்களவினான் அவளை உய்யக்
கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இதுபோல்வன
களவாகா, நன்மை பயக்கும் என்பது.”