பழைய பாடம் என்று கொண்டு இச்சூத்திரத்தின் பொருளை அறிய முயலுதல் பயன் தரும். தொல்காப்பியர் வரலாற்றுக்குப் புதிய ஒளி இளம்பூரணர், தொல்காப்பியரைப் பற்றிக் கூறும் கருத்துகள் வரலாற்றுக்குப் புதிய ஒளி தரவல்லவை. அகத்தியர் சூத்திரங்கள் என்று சிலவற்றை இளம்பூரணர் சிலவிடங்களில் காட்டி இருப்பினும் அகத்தியரையும் தொல்காப்பியரையும் இணைத்து எந்தக் கதையையும் புனைந்துரைக்கவில்லை. “தொல்காப்பியர் அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் ஒருவர்; பன்னிரு மாணாக்கரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இயலாக இயற்றித் தொகுத்த நூல், பன்னிரு படலம் என்னும் புறப்பொருள் இலக்கண நூல்; அத்தொகுப்பு நூலுள் முதல் படலமாகிய வெட்சிப் படலத்தை இயற்றியவர் தொல்காப்பியர்” என்பவை போன்ற கதைகளை இளம்பூரணர் நம்பவில்லை. இவர் காலத்தில் அத்தகைய கதைகள் நாடெங்கும் பரவி இருந்திருக்க வேண்டும். இளம்பூரணர் புறத்திணை இயலின் தொடக்கத்தில் பன்னிரு படலம் தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது என்பதை விளக்கப் பல காரணங்களைக் கூறுகின்றார். மேலும் தொல்காப்பியர் இயற்றியதாகக் கூறப்படும் வெட்சிப் படலம், தொல்காப்பியர் புறத்திணை இயலோடு முரண்படுவதையும் காட்டி, “பன்னிரு படலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினார் என்றல் பொருந்தாது” (புறத்-2) என்று தெளிவுபடுத்துகின்றார். இளம்பூரணருக்குப் பின்வந்த உரையாசிரியர்கள் அனைவரும் தொல்காப்பியரையும் அகத்தியரையும் இணைத்துக் கதைகளைப் புனைந்து கூறிவிட்டனர். கருத்துக் கொடை இளம்பூரணர் உரையில் கூறியுள்ள கருத்துகள் பலவற்றை அவருக்குப்பின் தோன்றிய இலக்கண ஆசிரியர்கள் மேற்கொண்டு நூற்பாக்களை அமைத்துள்ளனர். உரையாசிரியரின் கருத்துக் கொடை நூலாசிரியர்களை உருவாக்க முடியும் என்பதற்கு இளம்பூரணரே சிறந்த சான்றாவார். இளம்பூரணர் கருத்துகளை நேமிநாதம், நன்னூல், நம்பியகப் பொருள் ஆகிய நூல்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இரண்டொரு உதாரணங்கள் மட்டும் காண்போம்: |