தொல்காப்பியர் கற்பியலில், பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான (கற்-46) என்று கூறுகின்றார். இதற்கு உரை எழுதிய இளம்பூரணர், “இதனாற் பயன் என்னை எனின் அது கருத்தோன்றும் காலம் என்க” என்ற கருத்தை எழுகின்றார். இளம்பூரணர் சொன்ன கருத்தை மேற்கொண்டு நம்பியகப் பொருள் ஆசிரியர், பூத்த காலைப் புனையிழை மனைவியை நீரா டியபின் ஈராறு நாளும் கருவயிற்று உறூஉம் காலம் ஆதலின் பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன் (நம்பி-91) என்று கூறியுள்ளார். தொல்காப்பியர் உடம்படுமெய் பற்றி, எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (எழுத்-141) என்று கூறினார். இளம்பூரணர் இச் சூத்திரத்திற்கு உரை எழுதியபின், “உரையிற் கோடல் என்பதனால், உடம்படு மெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க. இகர ஈறும் ஈகார ஈறும் ஐகார ஈறும் யகர உடம்படுமெய் கொள்வன; அல்லன எல்லாம் வகரமெய் கொள்வன” என்று உரைத்துள்ளார். நன்னூலார் இளம்பூரணர் கருத்தைத் தழுவி, இஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் (நன்-162) என்று சூத்திரம் அமைத்துள்ளார். தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில், எப்பொரு ளாயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல் (சொல்-35) |