பக்கம் எண் :

191ஆய்வு

     செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு, “நும் நாடு யாது என்றால்,
தமிழ் நாடு என்றல்” என்பதை உதாரணங்காட்டுகின்றார் (சொல்-13). தமிழர்
வாழும் நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில்
இருந்தது என்பதை அறியும்போது எல்லையற்ற மகிழ்ச்சி பிறக்கிறது.

     வினாவிற்கு  விடையாக  உறுவது கூறுதலும் வழுவாகாது என்பதற்கு,
சாத்தா, உறையூர்க்குச் செல்லாயோ எனின், கடமுடையார் வளைப்பர்;
பகைவர் எறிவர் என்பது” என்று உதாரணம் காட்டுகின்றார் (சொல்-15).

     எழுத்ததிகாரத்தில்,

    வெண்ணுக்கரை (வெண்ணாற்றங்கரை)
    எண்ணுப்பாறு (எள் ஏற்றிய தோணி)
    எண்ணநோலை (எள் உருண்டை)
    ஈமக்குடம் (பிணத்தை இடும் மிடா)

ஆகியவற்றை உதாரணம் காட்டுகின்றார். இவை, இவர் அறிந்திருந்த இடம்,
மக்கள் உணவு, பழக்க வழக்கம் ஆகியவற்றை நமக்கு அறிவிக்கின்றன.

     கூழுக்குக் குற்றவேல் செய்யும் (சொல்-74), பசித்தேன் பழஞ்சோறு
தாஎன நின்றாள் (435) என்ற உதாரணங்கள், அக் காலத்தில் வாழ்ந்த
ஏழைமக்களின் நிலையினை உணர்த்துகின்றன.

     தம் காலத்தில் வழங்கி வந்த விடுகதை (பிசி) ஒன்றை உரையாசிரியர்
குறிப்பிடுகின்றார்:

                   அச்சுப் போலப்
                      பூ பூக்கும்!
                 அமலே என்னக்
                      காய் காய்க்கும்
                                          (பூசுணைக் கொடி)

போலிப் பாயிரம்

    இளம்பூரணரைப் பற்றி, சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று, செந்தமிழ்
என்னும் இதழில்* வெளிவந்துள்ளது:

     தண்கடல் அசைவளி உறுப்பத் திரைபிதிர்ந்
     தூங்கலின் பொருட்குவைப் புணரியில் ஐயுற
     அலைவமன் மயரினை அகற்றல் எழுத்தால்
     திணைதுறை உட்கோள் இயற்றினன், அறியாக்


 

 * செந்தமிழ் 20. பக்கம் 503.