பக்கம் எண் :

உரையாசிரியர்கள்190

கோலாம் ஆகலானும் செல்லும், அதற்குச் சார்பு அதுவாகலான்” (சொல்-53).

     “பாட்டு ஆராய்ந்தான்’ என்று இவர் காட்டும் தொடர் மொழி
(எழுத்-195) நம்மைச் சிந்திக்கவைக்கின்றது.

     கொங்கத்து உழவு, வங்கத்து வாணிகம் என்ற தொடர்கள் அக்கால
உழவுத்தொழிலையும், வாணிகத்தையும் நினைவூட்டுகின்றன.

     வட்டம், சதுரம், கோணம் முதலிய வடிவங்கள் அமைக்கவும்,
கோணத்துள் கோணமும் கோணத்துள் வட்டமும் அமைக்கவும்
அக்காலத்தவர் அறிந்திருந்தனர் என்பது நமக்கு வியப்பு அளிக்கிறது.
இச் செய்தியினை, “வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின”
(உவமையியல்  1) என்றும், “கோணா கோணம் கோணா வட்டம்”
(எழுத்-312) என்றும் இளம்பூரணர் குறிப்பிடுவதால் உணரலாம்.

     இளம்பூரணர் காலத்தில், ‘ஆசீவகப் பள்ளியும் குமரக் கோட்டமும்
இருந்தன (எழுத்.154). பெண்கள் தைந்நீராடினர். மக்கள் அறச்செயலுக்காகத்
தம்மிடம் உள்ள பசுக்களின் பாலைக் கறந்து தந்தனர். மாடுகள், தினவுபோகத்
தேய்த்துக்கொள்ள மரமோ கல்லோ பொது இடங்களில் நடப்பட்டது.
(சொல்-50).

     அக்காலத் தலைமகன், தனது நாட்டகத்து வழங்காது, பிற நாட்டகத்து
வழங்கும் நூலைக் கற்றுவரவும், வாரியுள் யானை காணவும், நாடுகாணவும்,
புனலாடவும், கடவுளரை வழிபடவும்  தலைவியைப் பிரிந்து செல்லுதல்
வழக்கமாக இருந்தது (அகத்:27,47). கணிவன் ‘பகலும் இரவும் இடைவிடாமல்
ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும்
தூமமும் மீன்வீழ்வும் கோள் நிலையும் மழைநிலையும் பார்த்துப் பயன்’
கூறினான் (புறத்-16).

     சிற்றூர்களில் கோழிகளை வளர்த்து அவற்றைப் போரிடச் செய்து
அவற்றின் வெற்றி தோல்விகளைக் கண்டு மக்கள் மகிழ்ந்தனர் என்பதை,
“மேலைச்சேரிக் கோழி அலைத்தது என, கீழைச்சேரிக் கோழி
அலைப்புண்டமை சொல்லாமையே முடிந்ததாம்” என்ற உரைப்பகுதியால்
அறியலாம் (சொல்-61).

     ‘அண்ணாத்து ஏரி’ என்று ஓர் ஏரியை இளம்பூரணர் சுட்டுகின்றார்
(எழுத்-134). இது, திருவண்ணாமலையில் இருந்த பெரிய ஏரியைக் குறிக்கலாம்
என்பர் மே.வீ.வேணுகோபால பிள்ளை.

     ‘உறையூரிற் பெரியது கருவூர்’ என்ற தொடர், கருவூரின் பழஞ்சிறப்பை
நினைவூட்டுகின்றது. (சொல்-106).