பக்கம் எண் :

189ஆய்வு

     4.   இளம்பூரணர் சமண சமயத்துறவி ஆதலின், பிற சமயத்தவர் இவர்
உரையைப் புறக்கணித்து, புது உரை கண்டு தம் உரையைப் பரப்பினர்.

     இளம்பூரணர் உரை, இன்று மீண்டும் கற்றவர் போற்றும் சிறப்பைப்
பெற்று வருகிறது. தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்ன கூறினார்
என்று அறியும் விருப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தொல்காப்பியத்தின்
பல்வேறு உரைகளை ஒப்பிட்டு நோக்கி் ஆராய்பவரும், உண்மை உரை
கண்டு தெளியும் ஆர்வம் உடையவரும், தமிழ்மொழிக்குத் தமிழ் மரபு
அறிந்து எழுதிய உரையே சிறந்தது என்று எண்ணுபவரும் இளம்பூரணர்
உரையைப் போற்றிக் கற்று வருகின்றனர்.

நாகரிகமும் பண்பாடும்

    இளம்பூரணர் உரையிலிருந்து அக்காலத்துத் தமிழ் நாட்டு நாகரிகமும்
பண்பாடும் அறிய முடிகின்றது. அவற்றைக் கீழே காண்போம்.

     எட்டி, காவிதி போன்ற பட்டம் பெற்றவர்களுக்குப் பூ அளித்தலும்,
புரவு (நிலம்) அளித்தலும் அக்காலத்தில் வழக்கமாய் இருந்தன. அவற்றை
இளம்பூரணர், “எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப் புரவு”
(எழுத்ததிகாரம்;155) என்று குறிப்பிடுகின்றார்.

     அரசியல் அலுவலர்களையும், தொழிலாளிகளையும் இளம்பூரணர்
பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

     “எல்லாக் கொல்லரும் சேவகரும் தச்சரும் புலவரும் எனவும்; எல்லா
நாயகரும் மணியகாரரும், வணிகரும் அரசரும் எனவும் வரும்” (எழுத்.-325).

     அக்காலத்தில் அம்புகளை வைக்கப் கொட்டிலும், போர்க் காலத்தில்
கோட்டையிலிருந்த பகைவர்மீது எய்ய அம்புப்புழை, துளை முதலியனவும்
இருந்தன. அவற்றை இளம்பூரணர், “ஏஎக் கொட்டில், சாலைதுளை புழை”
என்று குறிப்பிடுகின்றார் (எழுத்.-277). வில்லும் அம்பும் சிறந்த
போர்க்கருவிகளாகப் பயன்பட்டன. குதிரையை மத்திகைக் கோல் (சாட்டை)
கொண்டு அடித்து ஓட்டினர் என்ற செய்தியைப் பின்வரும் உரைப் பகுதியால்
உணரலாம்;

     “வில் பற்றி நின்று கோல் தா என்றால், கணைக்கோலின் மேல்நிற்கும்,
அதற்குச் சார்பு அதுவாகலான். குதிரை மேலிருந்து, ‘கோல் தா’ என்றால்,
மத்திகைக் கோலாம் ஆகலானும் சுள்ளற்