உரைப்பர் (122, 421), ஒரு சாரர் கூறுவர் (408, 455, 456) என்று இளம்பூரணர் பிறர் கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். ஒருகால், இளம்பூரணர் காலத்தில், தொல்காப்பியத்திற்குப் பல்வேறு உரைகள் வாய்மொழியாக வழங்கி வந்திருக்கலாம். அவற்றைக் கேட்டு அறிந்த உரையாசிரியர், தாம் எழுதிய உரையில் அவற்றைவிடாது போற்றிக் குறித்திருக்கலாம். இளம்பூரணருக்குப் பின் தொல்காப்பியம் பயில்வோர், எழுத்ததிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் உரையையும், சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும், பொருளதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் (முன் ஐந்து இயல்கள்), பேராசிரியர் (பின் நான்கு இயல்கள்) ஆகியோர் உரைகளையும் விரும்பிக் கற்பது வழக்கம். இவ்வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. இவ்வுரைகள் மிகுதியாகப் பயிலப்பட்டு வருவதால், தொல்காப்பியம் முழுவதற்கும் உரை கண்ட இளம்பூரணர் உரை வழக்கிழந்தது; பல ஆண்டுகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்து வந்தது. இளம்பூரணர் உரை செல்வாக்கு இழந்து, தொல்காப்பியம் கற்பவர் பார்வையிலிருந்து விலகிப் பின்தங்கிவிட்டதற்குக் காரணம் சில உண்டு. 1. இளம்பூரணருக்குப் பின் உரைகண்டோர் அவரது கருத்துகள் யாவற்றையும் எடுத்துத் தம் உரைகளுள் பெய்து கொண்டு தம்தம் காலத்திற்கு ஏற்ற புது விளக்கங்கள் பலவற்றைத் தந்து உரையை விரிவுபடுத்தினர். இதனால் இளம்பூரணர் உரை பின்தங்கிவிட்டது. 2. எளிய நடையே நல்லநடை என்ற கொள்கை இளம்பூரணருக்குப்பின் மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. அதனால், எளிய நடையில் எழுதப்பட்ட இளம்பூரணர் உரை ஒதுங்கியது. பலமுறை கற்று உணரும் நுட்பம் வாய்ந்து, எதுகை மோனைகள் அமைந்து, பல்வேறு வகையான இனிய உவமைகள் விரவி இன்னோசை பொருந்திய பிற்கால உரைகள் செல்வாக்குப் பெற்றுப் பரவின. 3. வடமொழிக்கும் வடமொழிக் கருத்திற்கும் இளம்பூரணருக்குப்பின் சிறந்த வரவேற்பு ஏற்பட்டது. தமிழ் ஒன்றே பயின்று, தமிழ்மரபு பிறழாமல் இளம்பூரணர் எழுதிய உரை, இருமொழிப் புலமை பெற்றவர் இயற்றிய உரைகளுடன் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை. |