பக்கம் எண் :

உரையாசிரியர்கள்242

மீண்டும் சிந்தாமணிக்குப் புது உரை இயற்றினார் என்பதும் விளங்கும்.

உரை இயல்பு

    நச்சினார்க்கினியர் தம் உரையில் தெளிவும், விளக்கமும் அமையுமாறு
எழுதிச் செல்வார். தேவையான இடங்களில் இலக்கணங்கூறி,
வினைமுடிபுகளைக்கூறி விளக்குவார். சிறந்த மேற்கோள்களைத் தருவார்.
ஆனால், மேற்கோளாகக் காட்டப் பெற்றவை எந்த நூலுக்குரியவை என்று
பெயர் சுட்டுவது இல்லை. பழைய பாடல்களை உரைநடையாக்கி இவர்
எழுதுவதுண்டு. “நல்லார் உறுப்பெலாம் கொண்டு இயற்றியாள்” என்னும்
குறிஞ்சிக்கலி அடியைச் சிந்தாமணி உரையில் (2453) ‘நல்லார் உறுப்பெலாம்
கொண்டு இயற்றுதலின், தேன்’ என்று உரை நடையாக்கியுள்ளார்.

     தாம் உரை எழுத எண்ணிய நூல் பிற சமயத்தைச் சார்ந்தது எனினும்,
அச் சமயத்தையும், நூலாசிரியர் கொள்கையையும் நன்கு அறிந்தே உரை
எழுதுவார் என்பதற்குச் சிந்தாமணி உரையே சான்றாகும்.

     மிகுதியாக எழுதி ஆரவாரம் செய்யாமல், சுருங்கச் சொல்லி விளங்க
வைப்பார். வெளிப்படையாக எல்லோர்க்கும் விளங்கும் பாடல்களுக்கு இவர்
உரை எழுதுவதில்லை. சிந்தாமணியில் உள்ள பல பாடல்களுக்கு உரை
எழுதாமல் ‘பொருள் வெளிப்படை’ என்றே எழுதுவார்.

     பத்துப்பாட்டு போன்ற மிக நெடிய பாடலாயினும் வினை முடிபு கூறி
விளக்குவார்.

     தொல்காப்பியம், சிந்தாமணி போன்ற பெரு நூல்களுக்கு உரை
எழுதும்போது, அவற்றை முன்னும் பின்னும் சிங்க நோக்காகக் கண்டு,
முழுநோக்கு உடையவராக விளங்குகின்றார். தொல்காப்பியத்தில் ஏதேனும்
ஒரு நூற்பாவுக்கு உரை காணும்போது, தொல்காப்பியம் எழுத்து, சொல்,
பொருள் ஆகிய மூன்று இலக்கணமும் உணர்த்தும் நூல் என்பதை இவர்
நினைவில் கொண்டே எழுதுகின்றார். எவ்விடத்தும் இவர் இந்த
நினைவோடே இருக்கின்றார்.

     சீவகசிந்தாமணிக்கு உரை எழுதும்போது முழுக் கதையையும் நினைவில்
கொண்டு எழுதுகின்றார். காப்பியத்தை முழு நோக்குடனே காண்கின்றார்.
பின்னால் வரும் நிகழ்ச்சியையும், முன்னே நடந்ததையும் சுட்டிச்
செல்லுகின்றார். சிந்தாமணிக் காப்பியத்தை இவர் பலமுறை பயின்று தெளிவு