பெற்றிருக்கவேண்டும். கதைக்காக ஒருமுறை-இலக்கியச் சுவைக்காக ஒருமுறை-சமயக் கருத்திற்காக ஒருமுறை-கற்பனைத் திறனுக்காக ஒருமுறை-சொற்பொருள் விளக்கத்திற்காக ஒருமுறை என்று பலமுறை அக் காப்பியத்தை இவர் பயின்று இருக்க வேண்டும். இவர் இலக்கிய உரையில் இலக்கணத்தை நினைவூட்டுவார்; இலக்கண உரையில் இலக்கியத்தை நினைவூட்டுவார். தம் உரைகளையே பல இடங்களில் சுட்டிக்காட்டி நினைவூட்டுவார். மாட்டு தொல்காப்பியர் செய்யுளுக்கு உரிய உறுப்புகளுள் ஒன்றாக ‘மாட்டு’ என்பதைக் குறிப்பிடுகின்றார். அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (செய்-210) என்று மாட்டு என்னும் உறுப்பினை விளக்குகின்றார். இச் சூத்திரத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் கூறியுள்ள கருத்து வேறு; நச்சினார்க்கினியர் கொள்ளும் கருத்து வேறு. சொல்லதிகாரத்தில், அணுகி வந்த மாட்டு, அகன்று வந்த மாட்டு என்று இருவகை மாட்டுகளைக் குறிப்பிடுகின்றார் (சொல்-409). மேலும், மொழிமாற்றுப் பொருள் கோள் வேறு; மாட்டு வேறு என்பதையும் விளக்கிக் கூறியுள்ளார். “மொழி மாற்றாவது கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக் கண்ணே வருவது என்றும், மாட்டு என்னும் உறுப்பாவது, இரண்டு இறந்த பல அடிக்கண்ணும் பலப்பல செய்யுள் தொடரின் கண்ணும் அகன்றும் அணுகியும் வரும் என்றும் கொள்க” என்பது அவ் விளக்கம் (சொல்-409). மாட்டு என்ற பெயரால், நச்சினார்க்கினியர் செய்யுட்களை கலைத்து, அடிகளை மாற்றிச் சொற்களைப் பிரித்து முன் பின்னாகக் கூட்டி வலிந்து பொருள் கொண்டு தம் கருத்தைப் பாட்டில் திணித்து விடுகின்றார். பத்துப்பாட்டில் ஒன்றாகிய சிறுபாணாற்றுப் படையின் முதல் இரண்டு அடிகள், மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம்போல என்பவையாகும். இவ்வடிகளை நச்சினார்க்கினியர் |