பக்கம் எண் :

உரையாசிரியர்கள்244

     பணைத்தோள்  மாநில மடந்தை மணிமலை
     அணிமுலை துயல்வரூஉம் ஆரம் போல

என்று சொற்களை முன்பின்னாகத் தம் விருப்பம்போல் மாற்றிப் பொருள்
எழுதுகின்றார்.

     செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்றுக்
     கொல்கரை நறும்பொழில்

என்ற அடிகளை,

     சேய்வரல் கரைகொல் கான்யாறு செல்புனல்
     உழந்த நறும்பொழில்

என்று மாற்றி விடுகின்றார்.

     பட்டினப் பாலையில்,

     வசையில்புகழ் வயங்குவெண்மீன்

என்று தொடங்கும் அடியில் உள்ள ‘வசையில் புகழ்’ என்ற சொற்றொடரைப்
பிரித்து ஆறாம் அடியில் உள்ள ‘காவிரி’ என்பதோடு கூட்டிப் பொருள்
எழுதுகின்றார்.

     பாட்டு இயற்றிய கவிஞன் கருத்தை அறவே புறக்கணித்து விட்டுத் தம்
கருத்தைப் புகுத்தி விடுதலும் உண்டு. முல்லைப் பாட்டில், தலைமகளை
ஆற்றுவிக்கக் கருதிப் பெருமுது பெண்டிர் நற்சொற் கேட்கும் நிகழ்ச்சியை,

     ....நெல்லொடு
    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப

என்று நப்பூதனார் கூறுகின்றார். ஆனால் நச்சினார்க்கினியர் போர்மேற்
செல்ல விரும்பும் மன்னனின் படைத்தலைவர் ஏவலால், நற்சொல் கோடற்கு
உரியவர் நற்சொல் கேட்டு நின்றனர் என்று தம் கருத்தைப் பாட்டில் ஏற்றிக்
கூற, சொற்களை முன்பின்னாக மாற்றுகின்றார். பதினெட்டாவது அடியில்
உள்ள ‘நல்லோர்’ என்ற சொல்லை எடுத்து ஏழாவது அடியில் கொண்டுபோய்
வைத்து,

     அருங்கடி மூதூர் மருங்கில் நல்லோர் போகி

என்று அமைத்துக் கொண்டு, “படைத்தலைவர் ஏவலால் நற்சொல் கோடற்கு
உரியோர் போய், தெய்வத்தை வணங்கி நற்சொல் கோடற்கு நிற்ப” என்று
பொருள் எழுதுகின்றார். இவ்வாறு எழுதி, பாட்டு எழுதிய ஆசிரியரின்
கருத்தைப் புறக்கணித்து விட்டுத் தம் கருத்தைப் பாட்டில் திணித்து
விடுகின்றார்.