இலக்கணச் சூத்திரங்களுக்கு உரை எழுதும்போதும் இவர் இம் முறையை மேற்கொள்ளுகின்றார். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில், மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் (புணரியில்-9) என்று தொடங்கும் நூற்பா ஆற்றொழுக்காகப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருப்பினும், அவ்வாறு பொருள் கொள்ளாமல் மேற்காட்டிய அடியை, ‘மருமொழியும்’ என்றும் ‘இன் தொகுதி மயங்கியல் மொழியும் என்றும் இருவகையாகப் பிரித்துப் பொருள் கூறுகின்றார். யகரமெய்யின் பிறப்பை விளக்குகின்ற, அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் என்னும் நூற்பார்வை (99), எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை அண்ணங் கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் என்று மாற்றிப் பொருள் கூறுகின்றார். மொழிமரபில் (எழுத்-40) ஆய்தத்தின் இயல்பைக் குறிப்பிடும் நூற்பாவில் உள்ள ‘மொழிக் குறிப்பெல்லாம்’ என்பதற்கு இளம்பூரணர், ‘குறிப்பு மொழி எல்லாம்’ என்று பொருள் கொண்டதை மாற்றி நச்சினார்க்கினியர், குறிப்பு மொழியும்; எல்லா மொழியும்-என்று பிரித்துக் கூட்டிப் பொருள் எழுதுகின்றார். பெயர்ச் சொல்லுடன் இணைந்து நிற்கின்ற இடைநிலைகளைக்கூடப் பிரித்து எடுத்து, தாம் விரும்பும் இடத்தில் சேர்த்துக் கொண்டு உரை எழுதுகின்றார். பாலைக்கலிப் பாடலில் (28), பாடல்சால் சிறப்பிற் சினையவும் சுனையவும் நாடினர் கொயல்வேண்டா நயந்துதாம் கொடுப்பபோல் என்ற அடிகளில், முதல் அடியில் சினையவும் சுனையவும் என்ற இரு சொற்களிலும் உள்ள உம்மையைப் பிரித்து எடுத்து, அடுத்த அடியில் உள்ள கொயல், நயந்து என்ற சொற்களுடன் இணைத்து விடுகின்றான்; பாடல்சால் சிறப்பிற் சினைசுனை நாடினர் கொயலும் வேண்டா நயந்தும் தாம் கொடுப்பபோல் என்று மாற்றி அமைத்துக் கொள்கின்றார். |