இவ்வாறு இவர் பாடல்களை அலைத்து வலிந்து பொருள் கூறும் இடங்கள் பலவற்றைக் காணலாம். இவர் காலத்திற்கு முற்பட்ட உரையாசிரியர்கள் யாரும் இவர் போலப் பாடல்களைச் சிதைத்துப் பொருள் கொண்டதில்லை. இவருக்குப் பின் தோன்றிய உரையாசிரியர்களும் இவரது உரைப்போக்கைக் கண்டித்துப் புதுஉரை காணத்தயங்கவும் இல்லை. பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களுக்கு ஆராய்ச்சியுரை எழுதிய மறைமலையடிகள், நச்சினார்க்கினியர் உரைப்போக்கைத் தக்க காரணம் பல காட்டி மறுக்கின்றார். “மாட்டு என்னும் செய்யுள் உறுப்பின் பயனாம் என்பது நுண்ணறிவுடையார்க்கு எல்லாம் இனிது விளங்கிக் கிடப்பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறியமாட்டாத நச்சினார்க்கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாராய் - ஓர் அடியில் ஒரு சொல்லையும் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார்.”1 “அங்ஙனம் உரை கூறுதல், நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரண் ஆதலானும், இவர்க்கு முன் இருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எல்லாம் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையானும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற் பாலது அன்று என மறுக்க”2 “செய்யுளுக்கு இசைய உரை எழுதுதல் வேண்டுமேயன்றி உரைக்கு ஏற்பச் செய்யுளை அலைத்து மாற்றல் வேண்டும் என்றல் ‘முடிக்குத் தக்க தலை செய்துகொள்வோம்’ என்பார் சொற்போல் நகையாடுவதற்கே ஏதுவாம் என்று ஒழிக”3 இத்தகைய வன்மையான மறுப்பு எழுப்பிய மறைமலை அடிகள், புது உரை கண்டு வழிகாட்டியாக விளங்குகின்றார்கள். தமிழ் மரபுக்கு ஒவ்வாத முறையில் உரை எழுதிய நச்சினார்க்கினியர் அவ்வாறு உரை எழுதுதற்குரிய காரணத்தை மறைமலையடிகள் எடுத்துக்காட்டவும் தவறவில்லை. முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரையில் அவர், “அற்றாயின், மிக்க செந்தமிழ் நூற்புலமையும் நுணுகிய அறிவும் உடைய நச்சினார்க்கினியர் 1. முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை (1937) பக். 35. 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை (1919) பக். 85. 3. முல்லைப் பாட்டு ஆராய்ச்சி உரை (1937) பக். 36. |