காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு (1251) “பயிர்ப்பாகிய வீட்டில், அச்சம் என்னும் நிலையில் மடம் என்னும் கதவில் இட்ட நாணம் என்னும் தாளை வெட்டும் காமமாகிய மழு. நயவுரை சில தொடர்களுக்குப் பரிதியார் எழுதும் விளக்கம் மிகவும் நயமாகவுள்ளது. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்: துறந்தார் (42)-மண் பொன் பெண் இந்த மூன்று வகை ஆசையைத் துறந்தார். அற்றார் (506) -பொருளும் கிளையும் கல்வியும் அற்றார். (காக்கை) கரைந்துண்ணும் (527) - இனங் கூட்டிப் புசிக்கும். செறுநர் செருக்கறுக்கும் எஃகு (759) - சத்துருக்கள் என்னும் காட்டை வெட்டுதற்கு ஆயுதம். கூற்று (765) - தன்னுயிரை ஒருவர்க்கும் கொடாத கூற்றுவன். பீடு நடை (1014) - மதயானை போல - ரிஷபம் போல நடக்கிற நடை. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் (1049) - நெருப்பினுள்ளும் நித்திரை செய்யலாம், அக்கினித் தம்பம் பண்ணி. துச்சில் (340) - “துச்சில் என்பது ஒருத்தர் அளவிலே ஒதுக்குக் குடியிருத்தல்.” பேச்சு நடையும் வழக்குச் சொல்லும் பரிதியார் உரையில் பேச்சு நடையும் வழக்குச் சொல்லும் மிகுதியாக உள்ளன. அவற்றைக் காண்போம்: நானாபதார்த்தம் (52), நானாவகை (514), வேணும் (116) கனவிலும் பிறவாது (139), எப்படி என்றால் (140), வயிறு வளர்ப்பது (183, 1032), சுட்டுப் போடும் (202), விளையாட்டிலும் சொல்லார் (199), தனக்கு வேண்டாதார் (203), வகையற்ற இடம் (218), தலை எழுத்து முடிந்த நாள் (269), விசாரித்து (514), இத்தனையல்லோ (912) நாட்டாண்மைக்காரன் (736). அகழ்வாரைத் தாங்கும் நிலம் (151) - பூமி வெட்டுகிற பேரையும் சுமக்கும். தன்னுயிர் தானறப் பெற்றானை (268) - தன் ஆத்மா ஈடேறப் பார்ப்பானை. |