பக்கம் எண் :

உரையாசிரியர்கள்356

    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அதுவிளிந் தற்று.                 (332)

என்ற குறளுக்குப் பரிதியர் எழுதியுள்ள உரை காலட்சேப முறையிலேயே
உள்ளது:

     “சந்தையிற் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து சந்தையில்
காரியங்கண்டு மீண்டும் போவார்கள்: அப்படியல்ல செல்வம். எப்படி
என்றால், கூத்தாடல் பார்க்க நாலு பேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு,
கூத்துக் குலைந்த போது ஒருக்காலே பிரிந்து ஓடுவார்கள். அதற்கு ஒக்குமே
செல்வத்தின் கூட்டம்; எப்படி என்றால் இவன் செய்த புண்ணியத்திற்குத்
தக்கதாக இலட்சுமி இருப்பாள்; இவன் தவசு மாறி இலட்சுமி போன பின்பு
அக்கினி கள்ளார் இராசா ஆறு இவையிற்றினாலே செல்வம்போம்; இஃது
அறிந்து உள்ளபோதே தன்மம் செய்வான் என்றவாறு.”

    யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற                   (300)

என்ற குறளுக்கும் உரை பின்வருமாறு உள்ளது.

     “ஆத்மாவைச் செனனத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது
சத்திய வாக்கியம் அன்றி, வேறொன்றும் கண்டிலோம்; அசத்தியம் சொன்ன
தருமபுத்திரன் நரகங் கண்டான்; சத்தியம் சொன்ன அரிச்சந்திரன்
ஸ்ரீபரமேசுவரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான் என்றவாறு”.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
    ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு               (269
)

     தலை எழுத்து முடிந்த நாள்வர, அப்போது கூற்றுவனையும்
வெல்லலாம், தவத்திற் பெரியோர்க்கு.

     அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்க்கண்டேயனையும்
கண்டுகொள்க.

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று            (22)

    “காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்களையும் துறந்த பேருக்கு
உவமை கூறில், பூமியில் இறந்த செனனம் எத்தனையுண்டு. அத்தனை
அறிந்தால் அவர்கள் பெருமை அறியலாம் என்றவாறு”

     இத்தகைய பகுதிகளை, 54, 56, 79, 89, 134, 148, 206, 213, 229, 262,
330, 371, 389, 447, 570, 927, 1066 ஆகிய குறட்பாக்களின் உரைகளிலும்
காணலாம்.