பக்கம் எண் :

14விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பெற்ற தோக்கலவார் சாதியை நினைவில் கொண்டு பாடப்பட்டிருக்கலாமென்று
கருத இடமிருக்கிறது.

     பாரதியாரின்  வாரிசுகளாகத்  தோன்றிய கவிமணி  தேசிக விநாயகனார்,
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை ஆகிய பெருங்   கவிஞர்களும்
வீரபாண்டியக்  கட்டபொம்மனையும் அவன்   நடத்திய பாஞ்சைப் போரையும்
அண்மைக்காலத்தில் புகழ்ந்து பாடியுள்ளனர்.

     தமிழகத்திலே  பல்வேறு குழாத்தினர் "கட்டபொம்மன் வில்லுப் பாட்டு "
எனத்  தயாரித்து   நாட்டின்   பலபகுதிகளிலும்  கலாநிகழ்ச்சியாக   நடத்தி
வருகின்றனர்.  இவையன்றி,   பாஞ்சாலங்குறிச்சிப்  போர்  பற்றி  உரைநடை
இலக்கியங்களும் ஏராளமாகத் தோன்றி யுள்ளன.
 

     பிரிட்டிஷ்  பேரரசினை  எதிர்த்த  வீரர்களிலே சரித்திர நாயகர்களாக
விளங்கும்  பெருமை பெற்ற தமிழர் பலராவர். அவர்களிலே,  நூற்று எழுபது
ஆண்டுகளாக மங்காது , மறையாது இலக்கிய உலகினில் புகழொளி வீசிவரும்
பேறும்  பெருமிதமும்  பாஞ்சைப்பதி  வீரன்  கட்டபொம்மன்  ஒருவனுக்கே
இருந்து வருகின்றன.

     இப்படி, கட்டபொம்மன்  பேரில்  அம்மானை , கும்மி, சிந்து என்னும்
பலவிதமான சந்தங்களி்லே கவிதை இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

     இன்னொரு செய்தி என்னவென்றால், வீரபாண்டியக் கட்ட பொம்மனை அன்னியருக்குக்   காட்டிக்   கொடுத்தவர்கள் பெயராலும்    இலக்கியங்கள்
தோன்றியிருப்பதாகும் .   ஆம் ; தேச  பக்தி   கொண்ட  எழுத்தாளர்கள்
கட்டபொம்மன் புகழ் பாடினரென்றால், பிரிட்டிஷ் விசுவாசிகளாக  இருந்தவர்
கள் கட்டபொம்மனைக்  காட்டிக் கொடுத்தவர்களின்  சரிதையைப்  பாடினர்.

     வீரபாண்டியக் கட்டபொம்மனைத் தனது மாளிகையிலே  விருந்துண்ண
அழைத்து, திரைமறைவில் சதி செய்து அவனை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்
தான்  புதுக்கோட்டை  மன்னன் விஜயரகுநாதத்   தொண்டைமான் . அவன்
பேரில், "தொண்டைமான் விஜயமு" என்னும் பெயரில்  ஒரு  இலக்கியத்தைத்
தோற்றுவித்துள்ளார் தெலுங்கு மொழிக் கவிஞர் ஒருவர்.

     கட்டபொம்மனை  ஆங்கிலேயரிடம்  பிடித்துக்  கொடுப்பதிலே புதுக்
கோட்டைத் தொண்டைமானுக்குத் துணைபுரிந்த முத்துவைரவ அம்பலக்காரர்
என்பவர்  மீதும்  கவிதை இலக்கியமொன்று  இயற்றப் பெற்றுள்ளது. அதன்
பெயர் 'முத்து வைரவ அம்பலக் கும்மி' என்பதாகும்.