பக்கம் எண் :

144விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பைசாசக் கல்வி

     தத்தம் தாய்மொழியின் வாயிலாகவே தாங்கள் முன்னேற முடியும், உயர்
பதவிகளை  அடைய  முடியும் என்ற  நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டவும்,
அதற்கு வாய்ப்பாக ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற முடியும் என்ற உறுதியை
மக்கள்   உள்ளங்களிலே   உருவாக்கவும்  தொடர்ந்து   பிரசார  பேரிகை
கொட்டினார் அடிகளார்.

      'ஆங்கிக்  கல்வி  முறை  ஒரு  பைசாசக் கல்வி முறையாகும். அதை
அழிப்பதற்காக இன்று என் வாழ்க்கையை அர்ப்பணம் செய்திருக்கிறேன்."1

      "ஆங்கிலக் கல்வி காரணமாக நமது ஆண்மையை இழந்து விட்டோம்;
நமது  அறிவு  குன்றிவிட்டது.  இக் கல்விமுறை காரணமாக நாம் பேடிகளாகி
விட்டோம்.  சுதந்திரம்  என்ற  தென்றலிலே   உலவ  நாம் விரும்புகிறோம்.
ஆனால் ஆங்கிலக் கல்விமுறை அடிமைத்தனத்தைத்தான் உண்டாக்கிவிட்டது.
இதனால் நமது சமுதாயம் ஆண்மையை இழந்து கொண்டு வருகிறது. ஆங்கில
ஆட்சி ஏற்படுமுன் நாம் அடிமைகளாக இருந்ததில்லை. முகலாயர் ஆட்சியின்
கீழும் நமக்கு ஒருவகையிலே சுதந்திரம் இருந்தது.  அக்பர் காலத்தில் பிரதாப்
சிம்மன் போன்ற வீரர்  தோன்றவில்லையா?  அவரங்கசீப்  காலத்தில் சிவாஜி
போன்ற தேசத் தொண்டர் வளர்ந்தோங்கவில்லையா? ஆனால், நமது நாட்டில்
ஆங்கிலேயர்  ஆட்சி  ஏற்பட்டுள்ள  இந்த நூற்றம்பது ஆண்டு காலத்திலே
சிவாஜியோ, பிரதாபசிம்மனோ நம்மிடம் தோன்றியதுண்டா?

     "நமது  நாட்டில்  அநேக  மகாராஜாக்கள்  இருக்கிறார்கள். அவர்களில்
ஒவ்வொருவரும்    தம்   சமஸ்தானத்து   பிரிட்டிஷ்   அதிகாரிக்கு   முன்
முழங்காலிட்டு  வணங்குகிறார்கள்.  தாங்கள்  அடிமைகளே என்பதை ஏற்றுக்
கொள்கிறார்கள்."2

     அடிகளார்  கல்வி  முழுவதும்  தாய்மொழியின்  மூலமாகவே  பயிற்று
விக்கப்பட   வேண்டும்  என்று  வலியுறுத்தத்   தொடங்கினார்.  1909 ஆம்
ஆண்டிலேயே - காங்கிரஸ் மகாசபையில் சேருவதற்கு முன்பே -தாம் எழுதி
வெளியிட்ட " இந்திய சுயராஜ்யம் " என்னும்  குஜராத்தி  மொழி நூலிலேயே,
ஆங்கில    மொழியின்    ஆதிக்கத்தைச்   சாடியிருக்கிறார்    அடிகளார்.
அது வருமாறு:


1. 'மாணவர்க்கு', பக்கம் 28
2. 'மாணவர்க்கு', பக்கம் 16