இந்நாட்டிலுள்ள படித்த மக்களை விடுவிக்கும் பொருட்டாக, ஆங்கில மொழியின் ஆதிக்கத்தையும் பகிஷ்கரிக்குமாறு மக்களைத் தூண்டினர். அடிகளாரின் இந்தக் கொள்கைக்கு வெற்றி தேட தம்மை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டார் திரு.வி.கலியாணசுந்தரனார். தமிழ்ப் பெரியார் திரு.வி.க. ஆங்கிலம் படித்த நம்மவர்களால் நம் நாட்டுக்கு நேர்ந்த கேடுகளை விம்முதலோடும் வேதனையோடும் வருணிக்கிறார், கேளுங்கள்: "ஆங்கிலம் பயின்ற கூட்டத்தார், தத்தம் பழந்தொழிலை இழிவெனக் கருதி, பத்துக்கும் பதினைந்துக்கும் திண்டாடி, ஒழுங்கை ஒழித்துவிட்டனர். நமது நாட்டுக்கும் கேடு சூழ்வித்தோர் ஆங்கிலம் பயின்ற கூட்டத்தவரே - அவரே-அவரே-என்று ஒரு முறைக்குப் பன்முறை அறைகூறுகிறோம். "நாட்டு உணர்ச்சியை - நாட்டுக் கல்வியை - நாட்டுத் தொழிலை - ஒழித்த ஒரு கல்வியை நாம் எவ்வாறு போற்றுவோம். ஆங்கிலப் புலமையை நாம் பழிப்பதாக எவரும் கருதலாகாது. அறிவை வளர்க்கும் நூல்கள் ஆங்கிலத்தில் இலட்சக்கணக்காக இருக்கின்றன. அறிவு வளர்ச்சிக்காக ஆங்கிலம் பயில்வதனால் நமது நாட்டுச் சிறப்புக்குன்றாது. வயிற்றுக்காக ஆங்கிலம் பயில்வது இழிவு என்பதனை மட்டும் குறிப்பிடுகின்றோம். "தற்போதுள்ள ஆட்சி முறையில் எல்லாக் காரியங்களும் ஆங்கிலத்தில் நடைபெறுகின்றன. அதனால் நம்மவர்கள் தொழிலின் பொருட்டு ஆங்கிலம் பயில அவாவுகின்றார்கள். அவ்வவாவை எழுப்புகிறது எது என்பது கவனிக்கற்பாலது. சுதேசமொழிகளில் ஆட்சிமுறைக் காரியங்கள் நடைபெறுங் காலத்து ஆங்கிலம் பயில அவாவுவோரை அறிஞரெனப் போற்றலாம்.அறிவு வளர்ச்சி கருதி ஆங்கிலம் பயின்றாலென்ன? ஜெர்மனி பயின்றாலென்ன? ஒழுங்குக்கு இடையூறு செய்யும் கல்வி முறை எதுவாயினும் அது ஒழிதல் வேண்டும்."1 1. 'தேசபக்தன்', 5-5-22 |